வியாழன், 28 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை அருகே உள்ள தொழிற்சாலைகளுக்கு எதிராக போராட்டம்

பரங்கிபேட்டை: பரங்கிபேட்டை அதை சுற்றி உள்ள  கடலோர கிராமங்களில் விவசாயிகள், மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் அமைக்கப்படும் தொழிற்சாலைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கடலூர் துறைமுகம் முதல் பரங்கிபேட்டை வரை சுமார் 9 பன்னாட்டு கம்பெனிகள் வருகின்றன. இதற்கு அந்த பகுதியில் உள்ள 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கமும் இணைந்து தொழிற்சாலைகள் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்கள், விழிப்புணர்வு பிரசாரங்கள் செய்துவருகின்றனர்.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை அருகே அமைக்கப்பட்டுவரும் தனியார் நிறுவனம் தனது கட்டுமானப் பணிகளில் கடுமையான சட்டவிதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது என்றும், அப்பகுதியில் சுற்றுசூழல், நிலத்தடிநீர் கடுமையான பாதிப்பை சந்திக்க உள்ளது என்றும், இதனால் கடற்கரையோரம் வாழும் மீனவ மக்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என வலியுறுத்தி சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் இந்நிறுவனம் செய்துவரும் சுற்றுசூழல் அத்துமீறல்களை எதிர்த்து தேசிய பசுமை ஆணையத்தால் தொடரப்பட்ட வழக்கில் உடனடியாக இந்நிறுவனம் தனது கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என்றும், அதன் சுற்றுப்புறத்தில் உள்ள அலையாத்தி காடுகளும், குடிநீர் மற்றும் காற்று மாசுப்படாமல் காக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது குறித்து அடுத்த கட்டப்பணிகள் மேற்கொள்வதற்கான ஆலோசனைக் கூட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுசத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் புதுகுப்பம், வில்லியநல்லூர், கொத்தட்டை, சின்னுர், பஞ்சாங்குப்பம், கரிகுப்பம் உட்பட 18க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது: சுமார் 25 ஆயிரம் மக்களின் வாழ்வுரிமையை அழிக்கும் வகையில் செயல்பட இருக்கும் பன்னாட்டு தொழிற்சாலைளை அகற்ற சம்பந்தப்பட்ட அமைச்சர் மற்றும் முதல்வரை சந்திக்க தூதுக்குழுவை அமைத்து, அனைவரையும் சந்தித்து பிரச்னைகள் குறித்து விளக்கி கூற உள்ளோம். வருகிற ஜூலை 3,4 தேதிகளில் ஒவ்வொரு கிராமம், கிராமமாக சென்று மக்களைத் திரட்டி தெருமுனை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படும். ஜூலை 2வது வாரத்தில் தொழிற்சாலைகளினால் ஏற்படும் பேராபத்தை விளக்கி புதுசத்திரத்தில் மாபெரும் மாநாடு நடத்தப்படும். இந்த மாநாடு அரசு மற்றும் காவல்துறை, பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமையும். அதன் பின்னர் அனைத்து கிராம மக்களையும் இணைத்து மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார் கே.பாலகிருஷ்ணன்.

ஆலோசனைக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் செல்வசிங், கனகராஜ், மாநிலக்குழு உறுப்பினர் மூசா, மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, பி.கற்பனைச்செல்வம், மாதவன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன், கடலூர் மாவட்ட மீன் பிடி தொழிலாளர் சங்க செயலாளர் வைத்திலிங்கம், ஒன்றிய செயலாளர் வாஞ்சிநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் சிதம்பரம் நகர செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், கொத்தட்டை ஊராட்சி மன்றத் தலைவர் நாகராஜ் மற்றும் அனைத்து கிராமத் தலைவர்கள், மீனவ சமுதாயத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக