புதன், 13 ஜூன், 2012

புவனகிரி வெள்ளாற்று பாலத்தில் விரிசல் தடுப்பு கட்டைகள் சேதம்

புவனகிரி-கீரப்பாளையம் இந்த இரண்டு பகுதியையும் இணைக்கும் விதமாக கடந்த 1964ல் புவனகிரி வெள்ளாற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது.
பாலத்தின் மேல் அமைந்துள்ள சாலையில் விரிசல். உடைந்து கிடக்கும் தடுப்புக் கட்டைகள். கோரைப் புற்கள் முளைத்து நடப்பதற்கே அச்சத்தை தரும் நடைபாதைகள், வெற்று அலங்கார பிம்பங்களாக மின்விளக்கு கம்பங்கள், எரியாத விளக்குகள் என வெள்ளாற்றின் குறுக்கே புவனகிரியில் கட்டப்பட்ட பாலத்தின் இன்றைய நிலை பரிதாபமாக உள்ளது. சென்னை, புதுச்சேரி, நெய்வேலி, சேலம், பண்ருட்டி போன்ற மார்க்கத்திலிருந்து வரும் பெரும்பாலான வாகனங்கள் இந்த பாலத்தின் வழியாகத்தான் சென்று வருகிறது.50 ஆண்டுகளை கடக்கும் இந்த பாலத்தின் மீதுள்ள சாலையில் தற்போது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விரிசல் வழியாக பார்த்தால் பாலத்திற்கு கீழே ஆற்றில் தண்ணீர் ஓடுவது நன்றாக பார்க்க முடிகிறது. மற்றொரு பகுதியில் பாலத்தின் ஒரு பகுதி சற்று உள் வாங்கி எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் இந்த பாலத்தை கடக்கும்போது அச்சத்துடனேயே கடந்து செல்கின்றனர்.
பாலத்தின் இருபுறமும் பொதுமக்கள் நடந்து செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் அதில் தொலைபேசி இணைப்புகளுக்கான குழாய்கள் புதைக்கப்பட்டதால் நடைபாதையின் அகலம் குறைந்து விட்டது. நடைபாதையின் உயரமும் குறைவாக இருப்பதால் வயதானவர்களும், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகளும் கடும் சிரமத்துடன் நடந்து செல்கின்றனர். பாலத்தைப் போலவே அதில் உள்ள மின் கம்பங்களுக்கும் வயதாகி விட்டன. விளக்குகள் இருக்கும் சில கம்பங்களிலும் விளக்குகள் சரியாக எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் இருட்டில் தடுமாறி கீழே விழுந்து அடிபடும் அவல நிலை உள்ளது.
பாலத்தின் நடைபாதை ஓரங்களில் இருக்கும் தடுப்புக் கட்டைகள் பல இடங்களில் உடைந்து கிடக்கிறது. சில இடங்களில் தடுப்புக் கட்டைகளின் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து துருப்பிடித்த இரும்பு கம்பிகள் மட்டும் பல்லை இளித்தபடி எட்டிப் பார்க்கின்றன. மழை காலங்களில் பாலத்தின் மேல் தண்ணீர் தேங்குவதால் இந்த வழியாக யாரும் நடந்து செல்ல முடியவில்லை. அப்படியே யாராவது நடந்து சென்றாலும், வேகமாக செல்லும் வாகனங்களால் நடந்து செல்பவர்களின் நிலை படும் பாடும் சொல்லி மாளாது.
இந்த பாலத்தை இடித்து விட்டு புதிய பாலத்தை கட்ட வேண்டும் என புவனகிரியில் உள்ள சமூக நல அமைப்புகள் முதல் அரசியல் கட்சிகள் வரை அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்த பின்னரே புதிய பாலம் கட்டப்பட்டது. அத்தகைய நிலைமை புவனகிரி வெள்ளாற்று பாலத்துக்கும் நேரிடுமோ என்ற கேள்வியே மக்களிடம் மேலோங்கி நிற்கிறது. ‘

0 கருத்துகள்:

கருத்துரையிடுக