இதுகுறித்து கலெக்டர் ராஜேந்திர ரத்னு நிருபர்களிடம் கூறியதாவது:
அரியானா மாநிலம், குர்கான் அருகே உள்ள மனேசர் பகுதியில் திறந்த நிலையில் இருந்த ஆழ்துளை கிணற்றில் விழுந்த நான்கு வயது சிறுமி 85 மணி நேர போராட்டத்திற்கு பிறகு இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவம் தமிழகத்தில் நிகழாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள், தரைக் கிணறுகள் மற்றும் பெரிய பள்ளங்கள் (அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்) குறித்து கணக்கெடுப்பு நடத்த குடிநீர் வடிகால் வாரியம், பொதுப்பணி, நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தப்பணி இரண்டு நாளில் முடிக்கப்படும்.
ஆழ்துளை கிணறு மற்றும் கட்டுமான பணிகளுக்காக பெரிய பள்ளங்கள் தோண்டும் போது அப்பகுதியில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் பொதுமக்கள் எவரும் அப்பகுதிக்கு வராமல் இருக்க தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். இதனை பணி மேற்கொள்ளும் காண்ட்ராக்டர்கள் செய்ய வேண்டும்.
ஆழ்துளை கிணறு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக பள்ளம் தோண்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பணிகளை விரைந்து முடிக்கவும், பணி கைவிடப்பட்டிருந்தால் அந்த பள்ளங்களை மூட சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள், சம்மந்தப்பட்ட நிறுவனம் மற்றும் தனியார்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்படும்.
உரிய அவகாசத்திற்குள் பள்ளங்களை மூடாவிட்டால் சம்பந்தப்பட்டோர் மீது பொதுமக்களுக்கு இடையூறு செய்ததற்காக 133 குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் ஆர்.டி.ஓ., மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
திறந்த நிலையில் உள்ள பள்ளங்கள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அருகே சிறுவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்திட பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும்.
பொதுமக்கள் தங்கள் பகுதியில் எங்கேனும் பெரிய பள்ளங்கள், திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் இருந்தால் அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்பினரிடம் தகவல் தெரிவிக்கலாம்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக