திங்கள், 25 ஜூன், 2012

கேரளா - குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம்!


இந்தியாவிலேயே கல்வியில் முதன்மை மாநிலம், கடவுளின் சொந்த இடம் என்றெல்லாம் இதுவரை வர்ணிக்கப்பட்டு வந்த கேரளம் இனி, குற்றச் செயல்களில் நம்பர் 1 மாநிலம் என்ற அடைமொழியையும் தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டியிருக்கும் என்பதை தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் அண்மைய தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவிலேயே மிகப்பெரும் மாநிலமான உத்திரப் பிரதேசம் மற்றும் தலைநகர் டெல்லி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, குற்றச் செயல்களில் முதன்மை மாநிலமாக கேரளா திகழ்கிறது.

மாநிலத்தின் மக்கள் தொகைக் கணக்கின் படியும் 2010ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட குற்றச் செயல்களின் படியும் குற்றச் செயல்களால் கேரளா பாதிக்கப்பட்டுள்ளது தெளிவாகியுள்ளது. கேரள மாநிலத்தின் துறைமுகம் மற்றும் வணிக நகரான கொச்சி மிக ஆபத்தான நகராகவும் உள்ளது. நாட்டின் குற்றவியல் புள்ளி சராசரி 187.6. ஆனால் கேரளாவின் குற்றவியல் புள்ளி இரண்டு மடங்கை விட அதிகமாக அதாவது 424.1ஆக உள்ளது.


இந்திய நகரங்களின் குற்றவியல் புள்ளியின் சராசரி 341.9 ஆக உள்ளது. அதிரவைக்கும் விதமாக கொச்சி நகரின் குற்றவியல் புள்ளி 1,879.8 ஆக உள்ளது. 2009ஆம் ஆண்டின் தகவல்களுடன் 2010ஆம் ஆண்டை ஒப்பிடும்போது கொச்சி நகரின் குற்றவியல் எண்ணிக்கை 193 சதவீதம் அதிகரித்துள்ளது.

கல்வி, பொருளாதாரம், அரசியல் மற்றும் மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவுக்கு தேசிய குற்றவியல் பதிவு மையத்தின் தகவல்கள் வரவேற்கக் கூடியவை அல்ல.

குற்றவியல் புள்ளி என்பது ஒரு இலட்சம் மக்கள் தொகைக்கு அங்கு நடைபெறும் குற்றவியல் நிகழ்வுகளை அடிப்படையாக வைத்துக் கணக்கிப்படுவதாகும். அதிக மக்கள் தொகை உடைய மாநிலம் குறைவான மக்கள் தொகை உடைய மாநிலத்தைவிட அதிக குற்றங்களை உடைய மாநிலமாக இருக்கக் கூடும். ஆனால் குற்றவியல் புள்ளி சராசரியாகக் கணக்கிடப்படுகிறது. அது அந்த மாநிலத்தின் அல்லது நகரத்தின் சட்டம் ஒழுங்கை பறைசாற்றுவதாகவும் அமையும்.

குற்றவியல் புள்ளியில் 424.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ள கேரளாவைத் தொடர்ந்து இரண்டாவது இடத்தில் உள்ள மாநிலம் மத்தியப் பிரதேசம் ஆகும். இம்மாநிலத்தின் குற்றவியல் புள்ளி 297.2 ஆகும். மூன்றாவது இடத்தில் உள்ள டெல்லியின் புள்ளி 279.8 ஆகும். நாட்டிலேயே குற்றங்கள் அதிமாக நடைபெறும் மாநிலமாகச் சித்தரிக்கப்பட்டு வரும் உத்திரப் பிரதேச மாநிலத்தின் குற்றவியல் புள்ளி 87.5 மட்டும்தான் என்பது ஆச்சர்யமே.

ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் கொலை, கொலை முயற்சி, வன்புணர்வு, கடத்தல், வரதட்சணை மரணங்கள் உள்ளிட்டவற்றின் அடிப்படையில் குற்றவியல் புள்ளி கணக்கிடப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக