புதுடெல்லி:மத்திய அரசு சார்பாக நடத்தப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான மாநாடு ‘பிரவாஸி பாரதீய திவாஸ்’ அடுத்த ஆண்டு கொச்சியில் நடைபெறும் என்று மத்திய வெளிநாட்டு வாழ் இந்தியர் நலன் துறை அமைச்சர் வயலார் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியது:
ஜனவரி மாதம் 7-ஆம் தேதி முதல் 9-ஆம் தேதி வரை நிகழ்ச்சி நடைபெறும். முதன் முறையாக பிரவாஸி பாரதீய திவாஸ் கேரளாவில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
கேரள அரசின் கோரிக்கையை ஏற்று இம்மாநாடு கொச்சியில் நடத்தப்படுகிறது. இந்தியாவில் கேரள மாநிலத்தில் இருந்துதான் அதிகமானோர் வெளிநாடுகளில் பணிபுரிகின்றனர். வெளிநாடு வாழ் இந்தியர்களின் மாநாட்டின் பிரச்சாரத்திற்காக வளைகுடா உள்ளிட்ட நாடுகளில் சுற்றுப்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
7-ஆம் தேதி துவங்கும் மாநாட்டில் முதல் நாள் கருத்தரங்குகளும், விவாதங்களும் நடைபெறும். எட்டாம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைப்பார். 9-ஆம் தேதி இறுதி நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்துகொள்வார். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான விருதுகளின் அறிவிப்பும், வழங்குதலும் நிகழ்ச்சியில் நடைபெறும். விருதிற்கான நபர்களை தேர்வுச்செய்யும் நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
இந்தியாவின் வெளிநாடு வாழ் இந்திய சமூகத்தை தாய்நாட்டுடன் கூடுதலாக தொடர்பை ஏற்படுத்துவதே கொச்சி மாநாட்டின் பிரகடனமாகும். 2000 பிரதிநிதிகளை பங்கேற்க செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொச்சியில் மாநாட்டை வெற்றிப்பெறச் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இவ்வாறு வயலார் ரவி தெரிவித்தார்








0 கருத்துகள்:
கருத்துரையிடுக