செவ்வாய், 26 ஜூன், 2012

பரங்கிப்பேட்டை வெள்ளாற்று முகத்துவாரம் அடைபட்டதால் மீனவர்கள் அவதி!

பரங்கிப்பேட்டை: வெள்ளாறு-கடல் முகத்துவாரம் அடைபட்டதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை முடசல் ஓடை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீனவ கிராம மக்கள் அனைவரும் மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி பிழைப்பு நடத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல முடசல் ஓடை வெள்ளாறு முகத்துவாரம் வழியாக தான் படகு மூலம் சென்று வருகின்னர்.
ஆனால் தற்போது அவர்கள் மீன்பிடி தொழிலை நிரந்தரமாக செய்ய முடியாமல் உள்ளனர். ஏனெனில் முகத்து வாரம் முழுவதும் அடைபட்டு உள்ளது.ஆண்டுதோறும் இதே நிலைதான் ஏற்பட்டு வருகிறது.இதை மீனவர்கள் தற்காலிகமாக தோண்டி சரி செய்வதும், அவை மீண்டும் மணலால் மூடுவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது.
தமிழக அரசு முகத்து வாரத்தை நிரந்தரமாக தூர்வாரி தடுப்பணை கட்டப்படும் என்று அறிவித்து இருந்தது. ஆனால் அந்த பணி இங்கு முழுமையாக நடைபெறவில்லை. இதன் காரணமாக மீண்டும் கடந்த 3 நாட்களாக வெள்ளாறு முகத்து வாரம் அடைபட்டு உள்ளது.
இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வில்லை. இதையடுத்து முடசல் ஓடையை சுற்றியுள்ள மீனவர்கள் 200-க்கும் மேற்பட்ட லாஞ்ச், ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைப்படகுகள், லம்பாடி படகுகள், சிறிய தோணிகள் ஆகியவற்றை முடசல் ஓடை வெள்ளாறு கரையோரம் நிறுத்தி வைத்துள்ளனர்.மத்திய அரசு மீன் இனத்தை பெருக்க 45 நாட்கள் தடை காலம் விதித்து இருந்தது.
தடை காலம் முடிந்து 10 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு ஆர்வமுடன் மீன்பிடித்து வந்தனர்.ஆனால் அதன்பிறகு முகத்துவாரம் அடைபட்டு உள்ளதால் தற்போது மீன் பிடிக்க செல்ல முடியாமல் வீட்டில் முடங்கி கிடக் கின்றனர். தடை காலம் இல்லாமலும் முகத்து வாரம் தடையால் முடசல் ஓடை, கூழையாறு, சூரியா நகர், முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர்.திட்டு, சின்னவாய்க்கால், பில்லுமேடு, அன்னங்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், சாமியார்பேட்டை உள்பட 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் உள்ளனர்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் தடைபட்டுள்ள வெள்ளாறு முகத்துவாரத்தை ஆழப்படுத்திட வேண்டும் என்று மீனவர்கள் எதிர்பார்த்துள்ளனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக