வெள்ளி, 29 ஜூன், 2012

கடலூரில் பழைய இரும்புக் கடைகளில் தீ விபத்து ரூ.10 லட்சம் பொருட்கள் எரிந்து சேதம்

கடலூர் : கடலூரில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று பழைய இரும்பு கடைகள் எரிந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஆஞ்சநேயர் கோவிலுக்குச் செல்லும் சாலையின் இருபுறமும் 30க்கும் மேற்பட்ட பழைய இரும்புக் கடைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் பழைய இரும்புப் பொருட்கள், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், பழைய டயர்கள், மின் மோட்டார், மோட்டார் சைக்கிள்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு, ஜாபர் என்பவரின் பழைய டயர் கடையில் புகை மூட்டம் ஏற்பட்டது. சற்று நேரத்தில் தீ கொழுந்து விட்டு எரிந்து அருகில் இருந்த ஜெயினுல்லாபிதீன் , முஸ்தாகீம் ஆகியோரின் கடைகளுக்குப் பரவியது. இந்தக் கடைகளில் இருந்த பழைய டயர்கள், இன்ஜின் அழுக்கு ஆயில் தீ பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
தகவலறிந்த கடலூர் கோட்ட தீயணைப்பு அதிகாரி குமாரசாமி, உதவி கோட்ட அலுவலர் சரவணன், நிலைய அலுவலர்கள் கடலூர் வீரபாகு, சிப்காட் கருணாகரன், நெல்லிக்குப்பம் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் 30 தீயணைப்பு வீரர்கள் ஐந்து தீயணைப்பு வண்டியுடன் விரைந்து வந்து மூன்று மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த திடீர் தீ விபத்தில் மூன்று கடைகளில் இருந்த 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பழைய இரும்பு, டயர், இன்ஜின் அழுக்கு ஆயில், மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்கள் எரிந்து சேதமடைந்தன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக