வெள்ளி, 29 ஜூன், 2012

தமிழகத்திற்கு புதிய ரெயில்கள் மேலும் விழுப்புரம்- மயிலாடுதுறைக்கு பாசஞ்சர் ரெயில்

 தமிழகத்தில் புதிதாக இயக்கப்பட உள்ள ரயில்களின் கால அட்டவணையை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது.
அதன்படி சென்னை சென்ட்ரல் – பெங்களூரு இடையே ஏசி இரண்டடுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஜோலார்பேட்டை வழியாக தினசரி இயக்கப்பட இருக்கிறது. இதனால் பிருந்தாவன் ரயிலின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
 இதேபோன்று கோவை – பிகானேர், ஈரோடு வழியாக யஷ்வந்தபூர் – கொச்சுவேலி வாராந்திர ஏசி ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இதுதவிர சென்னை சென்ட்ரலில் இருந்து ஷாலிமார், விசாகப்பட்டினம், அசான்சோல், பூரி ஆகிய இடங்களுக்கு வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
 
புதிய ரயில்களில் குறிப்பாக திருச்சி – திருநெல்வேலி இடையே இருமார்க்கத்திலும் பகல்நேர இன்டர்சிட்டி சூப்பர்பாஸ்ட் ரயில் திண்டுக்கல், மதுரை வழியாக இயக்கப்பட உள்ளன.
திருநெல்வேலி – தாதர், மதுரை – கச்சேக்குடா இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்பட இருக்கின்றன.
 
மேலும் மன்னார்குடி – திருப்பதி இடையே வாரம் மும்முறை எக்ஸ்பிரஸ் ரயிலும் விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை மற்றும் காட்பாடிக்கு தினசரி பாசஞ்சர் ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
விழுப்புரத்தில் பகல் 2.40 மணிக்கு புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு மயிலாடுத்துறை சென்றடையும். மயிலாடுத்துறையில் பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு விழுப்புரத்துக்கு மாலை 6 மணிக்கு வந்து சேரும். இந்த ரெயில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும்.
பாலக்காடு டவுனில் இருந்து கோவை வழியாக ஈரோடு, மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரை இடையே புதிதாக மின்சார ரயில்களும் இயக்கப்பட உள்ளன.
இதில் பெரும்பாலான ரயில்கள் இயக்கப்படும் தேதி குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுதவிர ஏற்கனவே இயக்கப்பட்டுவரும் முக்கிய ரயில்களின் நேரம், வேகம் ஆகியவை மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக