உடல் நலம் சரியில்லை என்று ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த பைலட்டுகள் நூற்றுக்கணக்கானோர் கடந்த 8ம் தேதி முதல் பணிக்கு வரவில்லை. இதையடுத்து கடந்த 3 நாட்களில் 45 பைலட்டுகளை ஏர் இந்தியா நிர்வாகம் பணி நீக்கம் செய்துள்ளது. உடல் நலம் சரியில்லை என்று கூறி ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 100 பைலட்டுகள் கடந்த 8ம் தேதி பணிக்கு வர மறுத்துவிட்டனர். இதனால் 5 சர்வதேச சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ரத்து செய்ய நேரிட்டது. இதனால் எரிச்சலான மத்திய அரசு பைலட்டுகள் சங்கத்திற்கான அங்கீகாரத்தை ரத்து செய்தது. மேலும் பணிக்கு வராத பைலட்டுகளில் 10 பேரை பணியில் இருந்து நீக்கி ஏர் இந்தியா அதிரடியாக உத்தரவிட்டது.
இந்நிலையில் பைலட்டுகளின் திடீர் வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்தது. அப்படியும் யாரும் பணிக்கு திரும்பவில்லை. இது தவிர பணிக்கு வராதவர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 300க்கும் மேல் அதிகரித்துள்ளது. இதையடுத்து நேற்று மேலும் 10 பைலட்டுகள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
அப்படியும் அவர்கள் இன்று பணிக்கு திரும்பவில்லை. இதனால் ஏர் இந்தியா பல வெளிநாட்டு விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. ஏற்கனவே நஷ்டத்தில் ஓடும் ஏர் இந்தியாவுக்கு இந்த வேலைநிறுத்தத்தால் மேலும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் கடுப்பான ஏர் இந்தியா நிர்வாகம் இன்று காலை 16 பேரையும், மாலை மேலும் 9 பைலட்டுகளையும் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து விமான போக்குவரத்து அமைச்சர் அஜித் சிங் கூறுகையில், உயர் நீதிமன்றம் சொல்லியே கேட்காத பைலட்டுகள், நான் சொல்வதை எங்கே கேட்கப் போகிறார்கள் என்றார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக