
தேர்தல் விதிமுறைகளை மீறி 4 தொகுதிகளில் போட்டியிட மனு தாக்கல் செய்ததால் தேர்தல் ஆணையம் சார்பில் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா மீது போடப்பட்ட வழக்கின் விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் 42-வது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.
அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, புவனகிரி ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் விதிமுறைகளை மீறி போட்டியிட மனு தாக்கல் செய்ததால், அவர் மீது தேர்தல் ஆணையம் வழக்குத் தொடரலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவுப் பிறப்பித்தது.
அதனடிப்படையில் புவனகிரி தொகுதி தேர்தல் அதிகாரி செல்வமணி, பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 9-ம் தேதி ஜெயலலிதா மீது வழக்குத் தொடர்ந்தார்.பின்னர் அவரது மேல்முறையீட்டின்படி உச்சநீதிமன்றத்தில் இடைக்காலத் தடை உத்தரவுப் பிறப்பித்தது. தடை உத்தரவு காரணமாக, இதுவரை இவ்வழக்கு 41 முறை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்வழக்கு விசாரணை பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
நீதிபதி சரத்ராஜ் இவ்வழக்கை ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். தேர்தல் ஆணையம் சார்பில் இளநிலை உதவியாளர் நடராஜன் ஆஜரானார். அப்போது நீதிபதி சரத்ராஜ், "தேர்தல் அதிகாரி செல்வமணிதான் ஆஜராக வேண்டும். நீங்கள் ஆஜராகக் கூடாது. எனவே அடுத்த முறை வழக்கு விசாரணையின் போது தேர்தல் அதிகாரி செல்வமணி ஆஜராக வேண்டும்' என உத்தரவிட்டார்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக