
நாட்டின் பல்வேறு பகுதிகளில், கடந்த 10 வருடங்களாக போலி என்கவுன்டர்கள்
நடத்தப்பட்டு வருகிறது. இந்த போலி என்கவுன்டர்கள் குறித்த நடத்தப்படும் விசாரணைகள்
அனைத்தும் ஒரே முறையில் மேற்கொள்ளப்பட வேண்டும் என குஜராத் மாநில அரசு சார்பில்
உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
போலீசாரால் செய்யப்படும் என்கவுன்டரை நாடு முழுவதும் உள்ள பல்வேறு குழுக்கள்
கண்காணித்து வருகின்றன. அதுவும் குஜராத் மாநிலத்தை மட்டும் கூடுதலாக கண்காணித்து
அம்மாநில போலீசை தாக்குகின்றனர். போலி என்கவுன்டர்கள் நாடு முழுவதும் நடப்பதால் அவை
அனைத்தையும் விசாரிக்க ஒரே முறையை பின்பற்ற வேண்டும். இதற்கென தனி கொள்கைகளை
வகுத்து தனி அமைப்பை ஒன்றையும் உருவாக்க வேண்டும்.
போலி என்கவுன்டர்களை கண்காணிக்க குஜராத் சார்பாக சிறப்பு கண்காணிப்புக் குழு
அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு போலி என்கவுன்டர்களைக் குறித்து விசாரணை
நடத்துகிறது.
மேலும் இந்த அமைப்பு செயல்படுவது போல் நாடு முழுவதும் உள்ள கண்காணிப்புக்
குழுக்கள் ஒரே மாதிரியாக செயல்பட உத்தரவிட வேண்டும். இதனால் மனித உரிமை மீறல்கள்
தடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதிகள் அப்தாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோரை
கொண்ட பெஞ்ச் ஏற்றுக்கொண்டது. இந்த மனு மீது கருத்து கூற தேசிய மனித உரிமை ஆணையம்,
மத்திய அரசு மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் சார்பில் நோட்டீஸ்
அனுப்பியுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக