வெள்ளி, 13 ஏப்ரல், 2012

அரசியலில் குற்ற பின்னணி, கறுப்பு பணம் இவற்றால்தான் இந்தியா சிறந்த ஜனநாயக நாடாக முடியவில்லை



   மக்கள் பிரதிநிதிகளை திரும்ப பெற்றுக் கொள்வதும், அரசியல்வாதிகள் ஓய்வு பெறும் வயதை நிர்ணயிப்பதும் நடைமுறையில் சாத்தியமில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி குரோஷி தெரிவித்தார். அரசியலில் குற்ற பின்னணியுடையோர் அதிகரித்து வருவதும், கறுப்பு பணமும் இந்திய ஜனநாயகத்துக்கு மிக பெரிய சவாலாக உள்ளன. இந்த இரண்டு காரணங்களால் இந்தியாவால் உலகின் மிக சிறந்த ஜனநாயக நாடாக முடியவில்லை என்றும் குரோஷி தெரிவித்துள்ளார். பிரதிநிதிகளை திரும்பப் பெறும் நல்லதொரு கருத்தாக இருப்பினும் அது சாத்தியமில்லை. அதிருப்தி கொண்டுள்ள மக்கள் இந்த முறையை தவறாக பயன்படுத்துவார்கள். குறிப்பிட்ட ஒருவருக்கு எதிராக கையெழுத்துகளை பெறுவது எவ்வளவு சுலபம் என்று நமக்கு நன்றாக தெரியும். மேலும் அரசியல் கட்சிகளும் இரண்டு ஆண்டு இடைவெளியில் அடுத்தடுத்து தேர்தல்களை சந்தித்து வரும் நிலையில் இந்த கருத்து செயல்முறைக்கு ஒத்துவராது என்றார். அரசியல்வாதிகள் ஓய்வு பெறுவது குறித்து பேசுகையில், நமது இளைஞர்களில் 10 முதல் 12 சதவீதம் பேரே வாக்களிக்கும் நிலையில் அரசியல்வாதிகளுக்கு ஓய்வு பெறும் வயதை நிர்ணயிப்பது சாத்தியமற்ற முயற்சி. ஒருவரால் அரசியல்வாதிகளை வெறுத்து ஜனநாயகத்தை விரும்ப முடியாது என்று அவர் விளக்கமளித்தார். அரசியல் கட்சிகளின் கணக்குகளை தேர்தல் ஆணையம் நியமிக்கும் அதிகாரியால் தணிக்கை செய்வது கட்சிகள் காசோலையாக மட்டுமே வரவு செலவுகளை செய்ய அனுமதிப்பது ஆகியவையே அரசியல் கட்சிகள் விஷயத்தில் செய்யப்பட வேண்டிய முக்கிய சீர்திருத்தங்களாகும். எனினும் இதற்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு இருப்பதால் இது குறித்து முடிவெடுக்க விவாதம் நடத்த வேண்டியதுள்ளது. ராணுவம், துணை ராணுவப்படையில் பணியாற்றுவோருக்கு பதிலாக வேறொருவர் வாக்களிப்பது குறித்து பாதுகாப்பு அமைச்கத்துடன் பேசியுள்ளோம். வேட்பாளருக்கு அரசே நிதியளிப்பது சிறந்த முறையாக இருக்காது. அரசு அளிக்கும் பணத்தை தவிர வேட்பாளர்கள் வேறு பணத்தை செலவு செய்யவில்லை என்பதை உறுதி செய்வது மிகவும் கடினமானது. மேலும் சில ஆண்டுகளுக்கு பிறகு இது தொடர்பான ஊழல் புகார்களும் எழுப்பப்படலாம் என்றார் குரோஷி.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக