வியாழன், 19 ஏப்ரல், 2012

மருத்துவ மனைகளையும், பரிசோதனை நிலையங்களையும் ஒழுங்குமுறைப்படுத்தும் அவசியம்!

தலைவிரித்தாடும் மருத்துவ உலகம்
 எந்தெந்த நோய்களுக்கு எவ்வாறு கட்டணம் வசூலிக்கவேண்டும், தற்போது வசூலிக்கப்படும் தொகைகள் கொள்ளையா? உண்மையில் ஏழை நோயாளிகளை பாதுகாக்கும் சட்ட திட்டங்கள் நாட்டில் உள்ளதா?
இந்திய மருந்து உற்பத்தி மற்றும் வினியோக முறைமைகள் இந்தியாவில் சட்ட ரீதியாகவும் பல்வேறு விதிகள் அடிப்படையிலும் ஓரளவுக்கு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தங்கள் இஷ்டத்திற்குத் தலை விரித்தாடும் தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்களிடம் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு கொள்ளை அடிக்கும் கிளினிக்கல் லேப்கள் ஆகியவற்றை கட்டுப்படுத்த சரியான சட்டதிட்டங்கள் நம் நாட்டில் இல்லை!

நாடுமுழுதும் இயங்கும் ஆயிரக்கணக்கான மருத்துவமனைகள், கிளினிக்கல் லேப்கள் அரசின் நேரரி அல்லது மறைமுக கண்காணிப்பிலோ, அல்லது விதிகளின் கீழோ இயங்குவதில்லை. இது கடந்த பல பத்தாண்டுகளாக இருந்து வருகிறது.

இந்த மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்கல் லேப்கள் அல்லது பரிசோதனை மையங்கள் ஒழுங்கான அற ரீதியான மருத்துவ முறைகளை மேற்கொள்வதில்லை. பலவற்றில் பல விதமான மோசடிகளும், நினைத்துப் பார்க்க முடியாத அளவில் நோயாளிகளைக் கொள்ளை அடிப்பதும், மோசடிகளும் நடைபெற்று வருவது என்பதுதான் இப்போதைய நிதர்சனம்.

இதில் குறிப்பாக நோய்பற்றிய பரிசோதனை மையங்கள், டயாக்னாஸ்டிக் சென்டர்கள் என்று அழைக்கப்படும் பல்வேறு டெஸ்ட்களை எடுக்கும் கிளினிக்கல் லேப்கள் ஆகியவற்றில் என்ன நடைபெறுகிறது என்பதே நாட்டு மக்களுக்கு தெரியாத நிலைதான் நம் நாட்டில் உள்ளது.

பல சமயங்களில் பரிசோதனை மையங்கள் தரும் தவறான டெஸ்ட் ரிப்போர்ட்களின் அடிப்படையிலேயே மருத்துவர்கள் தங்கள் நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகளை பரிந்துரை செய்கின்றனர்.

தற்போது உள்ள நிலவரப்படி இந்தியாவின் எந்த ஒரு மாநிலத்திலும் லேப்களின் டெஸ்ட் ரிப்போர்ட்களை கண்காணிக்கும் சரிபார்க்கும் எந்த வித ஒழுங்குமுறை விதிகளோ, சட்டங்களொ இல்லை என்பதே அவலமான ஒரு நிலையாகும்.

எனவே தனியார் மருத்துவமனைகள், கிளினிக்கல் லேப்கள், டெஸ்ட் மையங்கள் ஆகியவற்றை சட்டவிதிகளுக்குள் கொண்டு வந்து அவர்கள் செய்யும் வேலைக்கு அவர்களை பொறுப்பாக்குவதில் மைய அரசு எந்த வித முனைப்பையும் காட்டுவதில்லை. மாநில அரசுகளும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக