செவ்வாய், 4 ஆகஸ்ட், 2015

மாயமான மலேசிய விமானம்: ரீயூனியன் தீவில் மேலும் சில பாகங்கள் கண்டெடுப்பு

லண்டன்: மொரீஷியஸ் அருகே இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் மேலும் சில விமானப் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன. இவை மாயமான மலேசிய விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி 239 பேருடன் மலேசியாவில் இருந்து சீனா சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக மலேசிய அரசு தெரிவித்தது. ஆனால், அதற்கு ஆதாரமாக அந்த விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் தான், ஓராண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் பிரான்ஸின் கட்டுப்பாட்டில், இந்தியப் பெருங்கடலில் உள்ள லா ரீயூனியன் தீவில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியது. அந்த விமானப் பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டது.தீவில் கண்டெடுக்கப்பட்ட அந்த பாகம், பிரான்ஸில் விமான விபத்து புலன்விசாரணை ஆய்வுக் கூடத்தில் தற்போது ஆய்வு செய்யப்பட்டது. அதில், ஆய்வில் அந்த பாகம் போயிங் 777 ரக விமானத்தினுடையது என்பது உறுதியானது.ரீயூனியன் கடற்கரையில் கரை ஒதுங்கியது மாயமான எம்.ஹெச். 370 விமானத்தின் பாகங்கள் தான் என்று மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் உறுதிப்படுத்தி உள்ளார்.
அப்பகுதியில் இதற்கு முன்னர் போயிங் 777 ரக விமானம் விபத்தில் சிக்கவில்லை என்பதால், இது மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.அதன் தொடர்ச்சியாக, கடந்த ஞாயிறன்று லா ரீயூனியன் தீவில் உள்ள புனித டெனிஸ் நகரின் தெற்கு பகுதியில் விமானத்தின் கதவு போன்ற பொருள் கரை ஒதுங்கியது.இந்நிலையில், நேற்றும் சில விமானப் பாகங்கள் இப்பகுதியில் இருந்து கண்டெடுக்கப் பட்டுள்ளன.இதையடுத்து, அந்த பாகத்தை ஆராய்வதற்காக மலேசியா, ஒரு வல்லுனர் குழுவை அந்த தீவுக்கு அனுப்பி வைத்தது. மேலும், கரை ஒதுங்கிய அந்த விமான பாகத்தில் இடம்பெற்றுள்ள எண்ணின் அடிப்படையில் அது மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்துக்கு உரியதுதான் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து மலேசிய பிரதமர் நஜிப் ரசாக், செய்தியாளர்களிடம் கூறும்போது, ''மடகாஸ்கர் அருகே இந்திய பெருங்கடலின் ரீயூனியனில் கண்டெடுக்கப்பட்ட விமான பாகங்கள், 2014 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மாயமான எம்.எச். 370 பயணிகள் விமானத்தின் பாகம் தான். எஞ்சியுள்ள பாகங்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது. மேலும், விமானம் விபத்துக்குள்ளான காரணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக