சனி, 15 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் திடீர் ஆய்வு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை பகுதியில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் சுரேஷ்குமார் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பண்ணை குட்டைகள்
கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் நேற்று பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கு நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளான மயான கொட்டகை, மீன் பண்ணை குட்டைகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து சி.புதுப்பேட்டை, சுனாமி நகர் மற்றும் பள்ளிப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டிட பணிகளையும் பார்வையிட்டு சோதனை செய்தார்.
அப்போது அங்கிருந்த அதிகாரிகளிடம் கலெக்டர் சுரேஷ்குமார் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு கட்டிட பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும். மேலும் கட்டிட பணிகளை நல்ல தரத்துடன் கட்டவேண்டும் எனவும் கூறினார். அப்போது அவருடன் தாசில்தார் ராஜவேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அன்பழகன், தாராஈஸ்வரி, ஒன்றிய பொறியாளர்கள் செந்தாமரை, கிருஷ்ணன், கந்தவேல், வருவாய் ஆய்வாளர் செம்மலை, செல்வி, ஊராட்சி மன்ற தலைவர்கள் சங்கர், அபிபுனிசா அய்யூப், மாரியம்மாள் சேகர் உள்பட பலர் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக