வெள்ளி, 21 ஆகஸ்ட், 2015

ரூ440 கோடி ஊழல்: பா.ஜ.க. அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு!!

அகமதாபாத்: ரூ440 கோடி ஊழல் முறைகேட்டில் ஈடுபட்ட குஜராத் பாரதிய ஜனதா கட்சி அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி மீது வழக்குப் பதிவு செய்ய அம்மாநில நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. மத்தியப் பிரதேச ஆளும் பாரதிய ஜனதா அரசின் வியாபம் ஊழல் ஆசியாவிலேயே மிகப் பெரிய முறைகேடாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ராஜஸ்தானில் ஆளும் பா.ஜ.க. முதல்வர் வசுந்தரராஜே சிந்தியா, தேடப்படும் குற்றவாளி லலித் மோடிக்கு உதவிய
புகாரில் சிக்கியுள்ளார்.

மகாராஷ்டிராவில் பங்கஜ் முண்டே பல நூறு கோடி ரூபாய் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான பாரதிய ஜனதா ஆளும் குஜராத் மாநிலத்திலும் ரூ.440 கோடி அளவுக்கு மிகப்பெரிய ஊழல் புகார் பூதாகரமாக கிளம்பியுள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2008-ம் ஆண்டு 58 ஏரிகளில் மீன் பிடிக்க குத்தகைக்கு விடப்பட்டது. இதில் ஆட்சியாளர்கள் முறைகேடுக்கு வழி வகுக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்பட்டதாக குஜராத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் இசாக் மராடியா புகார் கூறினார். இதுபற்றி மாநில லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். மீன்பிடி குத்தகையில் ரூ.440 கோடி அளவுக்கு முறைகேடு நடந்து இருப்பதாக கூறிய அவர் அதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இந்த ஊழல் தொடர்பாக தற்போது குஜராத்தில் கால் நடைத்துறை அமைச்சராக இருக்கும் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் அமைச்சர் திலிப் சங்கானி மற்றும் 5 ஓய்வு பெற்ற அதிகாரிகள் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. மீன்பிடி குத்தகை விடுவதில் விதிகள் கடைப்பிடிக்கப்படவில்லை. வேண்டியவர்களுக்கு மீன்பிடி உரிமம் வழங்கி முறைகேடுகளில் ஈடுபட்டு இருப்பதாக கூறப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி கடந்த 2014-ம் ஆண்டு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு அகமதாபாத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை அறிக்கை மூலம் முறைகேடு நடந்ததற்கான முகாந்திரம் இருப்பது தெரிய வருவதால் தற்போதைய அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி, முன்னாள் அமைச்சர் திலிப் சங்கானி மற்றும் 5 முன்னாள் அதிகாரிகள் மீது லஞ்ச ஊழல் வழக்குப்பதிவு செய்யுமாறு நீதிபதி ரிஸ்வானா கோகாரி உத்தர விட்டார். இந்த உத்தரவைத் தொடர்ந்து குஜராத் மாநில பாரதிய ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. குற்றச்சாட்டுக்கு ஆளான அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் போர்க்கொடி தூக்கி உள்ளது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக