திங்கள், 10 ஆகஸ்ட், 2015

பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 40 பேர் கைது


பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரங்கிப்பேட்டை பஸ்நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையால் பொது மக்களுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. எனவே அந்த கடையை உடனடியாக அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி எஸ்.டி.பி.ஐ. (சோஷியல் டெமாக்ரெட்டிவ் பார்ட்டி ஆப் இந்தியா) அமைப்பை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர்.
ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ.யின்  மாநில தலைவர் முகமது பாரூக் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்த பலரும் பரங்கிப்பேட்டை சஞ்சீவிராயர் கோவில் முன்பு நேற்று ஒன்று திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக டாஸ்மாக் கடைக்கு சென்று ஆர்ப்பாட்டம் நடத்த புறப்பட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பரங்கிப்பேட்டை போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.









அப்போது எஸ்.டி.பி.ஐ. அமைப்பை சேர்ந்தவர்கள் டாஸ்மாக் கடையை அகற்ற கோரியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். மேலும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்யவும் முயன்றனர். இதையடுத்து போலீசார் மாநில தலைவர் முகமதுபாரூக், மாவட்ட தலைவர் நஸ்ருதீன் மாவட்ட  செயலாளர் ஹமீது ப்ரோஜ்  உள்பட 40 பேரை கைது செய்து அகரம்  ராமகிருஷ்ணா மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு பின் மாலை விடுவிக்கப்பட்டனர்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக