கடலூர்:நூறு நாள் வேலைத் திட்டத்தில் கூலி கிடைக்காமல் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.பருவ நிலை மாற்றங்களால் வேலை கிடைக்காமல் விவசாய தொழிலாளர்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்கவும், இவர்களைக் கொண்டு கிராமங்களில் நீர் ஆதாரங்களை ஏற்படுத்துவது; இருக்கின்ற நீர் நிலைகளை மேம்படுத்துவது மற்றும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் கடந்த முந்தைய காங்., மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்தை அறிவித்தது.இத்திட்டம் தமிழகத்தில் கடலூர், புதுக்கோட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் பரிட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டது. பின்னர் இது நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்பட்டது.இத்திட்டத்தில், விவசாய தொழிலாளர்கள் வேலை இல்லாத நாட்களில் ஆண்டிற்கு 100 நாள் அந்தந்த ஊராட்சிகள் மூலம் வேலை அளிக்க வகை செய்தது. துவக்கத்தில் நாள் ஒன்றுக்கு 54 ரூபாயாக இருந்த ஊதியம் தற்போது 183 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், ஏழைகளுக்காக துவங்கப்பட்ட இத்திட்டத்தில், வசதி படைத்தவர்களும் பங்கேற்கத் துவங்கியதோடு, பல்வேறு வகைகளில் முறைகேடுகளும் அதிகரித்து வருகிறது.இத்திட்டம் ஊரக வளர்ச்சி மேம்பாட்டு முகமை சார்பில் ஊராட்சிகள் மேற்கொள்ளப்படுவதால், உள்ளாட்சி பிரதிநிதிகள் பெரும் முறைகேடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக கடலூர் மாவட்டத்தில் இறந்தவர்கள், வெளிநாடுகளுக்குச் சென்றவர்கள், ஊராட்சி தலைவர்களின் உறவினர்களின் பெயர்களை பயனாளிகள் பட்டியலில் பெயரை ஏற்றி, அவர்கள் வேலை செய்தது போல் போலியாக வருகைப் பதிவேடு தயாரித்தும், போலி கையெழுத்திட்டும் பெருமளவில் நிதி மோசடி செய்யப்பட்டது.இதுதொடர்பாக பல்வேறு விவசாய அமைப்புகள் போராடியதைத் தொடர்ந்து பயனாளிகளுக்கு வங்கிகள் மூலம் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இருப்பினும், மாவட்டத்தில் இத்திட்டத்தில் முறைகேடுகள் தொடர்வதும், ஊதியம் கிடைக்காமல் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம், மறியல், முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடுவதும், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் முறையிடுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று கடலூரில் கலெக்டர் தலைமையில் நடைபெற்ற வாராந்திர
குறைக்கேட்புக் கூட்டத்தில் புவனகிரி தாலுகா பி.கொளக்குடி ஊராட்சியைச் சேர்ந்த 200
பெண்கள் உட்பட 350 பேர் இரண்டு லாரிகளில் வந்து மனு கொடுத்தனர்.அதில், கடந்த 2
ஆண்டுகளாக வேலை வழங்காமல், வேலை செய்தது போல் போலி ஆவணங்கள் தயாரில் பல லட்சம்
ரூபாய் மோசடி செய்ததாகவும், செய்த வேலைக்கு ஊதியம் வழங்கக் கோரி மனு
கொடுத்தனர்.அதேபோன்று கடலூர் அடுத்த அன்னவெளி கிராமத்தைச் சேர்ந்த 150 பெண்கள்
உட்பட 200 பேர் ஊர்வலமாக வந்து, நூறு நாள் வேலை திட்டத்தில் வேலை செய்த தங்களுக்கு
சரிவர ஊதியம் வழங்காமல் அலைக்கழிக்கப்படுவதாகவும், இதுதொடர்பாக கடந்தாண்டு முதல்
தொடர்ந்து மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறி மனு கொடுத்தனர்.ஒவ்வொரு
வாரமும் மாவட்டத்தில் ஏதேனும் ஒரு ஊராட்சியில் இருந்து கிராம மக்கள் திரண்டு வந்து
குறைகேட்புக் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுப்பது தொடர் கதையாகி வருகிறது. இந்த
முறைகேடுகளைத் தடுத்திட மாவட்ட நிர்வாகம், இனியேனும் விரைந்து நடவடிக்கை எடுக்க
வேண்டும்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக