செவ்வாய், 28 ஜூலை, 2015

முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம் காலமானார்: சொந்த ஊரில் நல்லடக்கம்

சென்னை:முன்னாள் ஜனாதிபதி A.P.J.அப்துல் கலாம் காலமானார்:மாரடைப்பு காரணமாக அவர்  உயிர் பிரிந்தது
நாளை மறுநாள் (ஜூலை 30ம் தேதி) அவரின் சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் நடைபெற உள்ளது.

மேகாலய மாநில தலைநகர் ஷில்லாங்கில் உள்ள இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தில் (ஐ.ஐ.எம்.) இன்று நடைபெற்ற கருத்தரங்கில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்து கொண்டார். அப்போது மேடையில் பேசிக் கொண்டிருந்த அப்துல் கலாமுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

மயங்கி சரிந்த அவரை அங்குள்ள பெத்தானி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர்
அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இதையடுத்து ராணுவ மருத்துவமனையின்
சிறப்பு மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது.இந்த மருத்துவர்கள் அப்துல் கலாமின் உடல்நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்துல் கலாமின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.

84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர் இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவரும், தலைசிறந்த விஞ்ஞானியுமான அப்துல் கலாமின் உறவினர்களின் கோரிக்கைக்கு ஏற்பட அவரது உடல் பிறந்த ஊரான ராமேஸ்வரத்தில் அடக்கம் செய்யப்படும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழ்நாடு மாநிலத்தில், பாம்பன் தீவில் அமைந்துள்ள இராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய நகராட்சியான இராமேஸ்வரத்தில் பிறந்தார்.
தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தபிறகு, திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியல் பயின்றார். 1954ஆம் ஆண்டு, இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். ஆனால், இயற்பியல் துறையில் ஆர்வம் இல்லை என உணர்ந்த இவர், 1955 ஆம் ஆண்டு தன்னுடைய “விண்வெளி பொறியில் படிப்பை” சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் தொடங்கினார். பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றார்.
1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தன்னுடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கிய அப்துல் கலாம், ஒரு சிறிய ஹெலிகாப்டரை இந்திய ராணுவத்திற்காக வடிவமைத்து கொடுத்தார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் (ISRO) தனது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த அவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கிய பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது. இத்தகைய வியக்கதக்க செயலைப் பாராட்டி மத்திய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷன்” விருது வழங்கி கௌரவித்தது. 1963 ஆம் ஆண்டு முதல் 1983 ஆம் ஆண்டு வரை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி கூடத்தில் பல பணிகளை சிறப்பாக செய்த இவர், 1999 ஆம் ஆண்டு “பொக்ரான் அணு ஆயுத சோதனையில்” முக்கிய பங்காற்றியுள்ளார். இந்தியாவை அணு ஆயுத வல்லரசாக மாற்றிய ஏ.பி.ஜே அப்துல் கலாம், இதுவரை ஐந்து ஏவுகணை திட்டங்களில் பணிபுரிந்துள்ளார். அவர், அனைவராலும் இந்திய ராணுவ ராக்கெட் படைப்பின் பிதாவாக போற்றப்படுகிறார்.
002 ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராக ஜூலை 25 ஆம் நாள் 2002 ல் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருது” மத்திய அரசு இவருக்கு வழங்கி கௌரவித்தது. மேலும், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசு தலைவர் என்ற பெருமையைப் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராக இருந்த இவர் “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு குடியரசுத் தேர்தலில் மீண்டும் போட்டியிட நினைத்த கலாம், பிறகு பல காரணங்களால் அந்த தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு செய்து விலகினார்.
விருதுகள்:
1981 – பத்ம பூஷன்
1990 – பத்ம விபூஷன்
1997 – பாரத ரத்னா
1997 – தேசிய ஒருங்கிணைப்பு இந்திராகாந்தி விருது
1998 – வீர் சவர்கார் விருது
2000 – ராமானுஜன் விருது
2007 – அறிவியல் கவுரவ டாக்டர் பட்டம்
2007 – கிங் சார்லஸ்-II பட்டம்
2008 – பொறியியல் டாக்டர் பட்டம்
2009 – சர்வதேச வோன் கார்மான் விங்ஸ் விருது
2009 – ஹூவர் மெடல்
2010 – பொறியியல் டாக்டர் பட்டம்
2012 – சட்டங்களின் டாக்டர்
2012 – சவரா சம்ஸ்க்ருதி புரஸ்கார் விருது
ஏ.பி.ஜே அப்துல் கலாம் எழுதிய நூல்கள்:
அக்னி சிறகுகள்
இந்தியா 2012
எழுச்சி தீபங்கள்
அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை
 
நாளை காலை தில்லியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டுவரப்படும் அப்துல் கலாமின் உடல்
30ம் தேதி வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில் ராமேஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக