கடலுார்:கடலுார் மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென வீசிய சூறைக்
காற்றில் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின் வினியோகம்
துண்டிக்கப்பட்டது.வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில்
மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலுார்
மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில்
ஒருசில இடங்களில் லேசான மழை பெய்தது.நேற்று மாலை 6:30 மணிக்கு பலத்த சூறைக்காற்று
சுழன்று, சுழன்று வீசியது. உடன் மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.சூறைக்காற்றில்
மரங்கள் பேயாட்டம் போட்டன. வேம்பு, முருங்கை, வாழை போன்ற மரங்கள் முறிந்தும்,
வேம்பு உள்ளிட்ட மரங்கள் முறிந்து மின் கம்பிகளில் விழுந்ததால், பல பகுதிகளில் மின்
கம்பிகள் அறுந்து விழுந்தன. விளம்பர பேனர்கள் சரிந்து சாலைகளில் விழுந்தன. அரை மணி
நேரத்திற்கு பிறகு காற்றின் வேகம் குறைந்து, மழை நின்றது.
கடலுாரில் இரவு
8:30 மணிக்கு மின் வினியோகம் வழங்கப்பட்டது. திடீர் சூறைக்காற்றினால், கடலுார்
அடுத்த ராமாபுரம், குமளங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பல நுாறு ஏக்கரில்
பயிரிடப்பட்டிருந்த வாழைகள் முற்றிலுமாக முறிந்ததால், விவசாயிகள் பெரும்
நஷ்டத்திற்கு ஆளாகினர்.
இது தவிர , விருத்தாசலம் சிதம்பரம் ,பரங்கிப்பேட்டை காட்டுமன்னார் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சூறாவளியுடன் மழை பெய்தது. மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது பண்ருட்டி பகுதியில் மாலையில், சுமார் ½ மணி நேரம் பலத்த சூறைக்காற்று வீசியது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக