ஞாயிறு, 29 மார்ச், 2015

ஏழை மக்களிடம் ஊராட்சித் தலைவர்கள்... : ரூ.20 ஆயிரம் கொடுத்தால் பசுமை வீடு "ஓகே'


கடலூர்: கடலூர் மாவட்டத்தில் பசுமை வீடுகள், பணம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யும் நிலை உள்ளதால், ஏழைகளுக்கு எட்டாக் கனியாக மாறும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை குடிசைகள் இல்லாத மாநிலமாக மாற்றிட கடந்த தி.மு.க., ஆட்சியில் இலவச வீடு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், சொந்தமாக மனைப்பட்டா வைத்திருந்தால் அவர்கள் 200 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள அரசு சார்பில் ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. கடந்த 2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற ஜெ., பசுமை வீடு திட்டத்தை அறிவித்தார். அதில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள சொந்த வீட்டு மனை வைத்திருந்தால், அவர்களாகவே 300 சதுர அடியில் கான்கிரீட் வீடு கட்டிக் கொள்ள 1.5 லட்சம் ரூபாயும், சூரிய மின் சக்தி வசதி ஏற்படுத்த 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 1.80 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
தற்போது இத்திட்டத்தில் வீடு கட்ட 1.80 லட்சம் ரூபாயும், சூரிய மின் சக்திக்கு 30 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 2.10 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கான பயனாளிகளை ஊராட்சி நிர்வாகமே தேர்வு செய்ய வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊராட்சி நிர்வாகம் அரசின் விதிகளைப் பின்பற்றாமல், தங்களது ஆதரவாளர் அல்லது பணம் கொடுப்பவர்களை மட்டுமே பயனாளிகளாகத் தேர்வு செய்கிறது. இதனால், கூரை வீட்டில் வசிக்கும் ஏழைப் பயனாளிகளை அரசின் உயரிய திட்டமான பசுமை வீடு சென்றடையாமல், வசதி படைத்தவர்களுக்கே சென்றடைகிறது.
இந்நிலையில், வரும் நிதியாண்டிற்கு 2,713 பசுமை வீடுகள் கடலூர் மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி பசுமை வீட்டிற்கு பயனாளிகள் தேர்வு செய்யும் பணி பல ஊராட்சிகளில் நடந்து வருகிறது. இதற்காக 10 சதவீதம் அதாவது 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரை கமிஷன் தருபவர்களே பயனாளிகளாகும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அனைத்து தகுதியும் உள்ள ஏழைப் பயனாளிகள் ஏமாற்றத்திற்குள்ளாகும் நிலை உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலரிடம் கேட்டபோது, "பசுமை வீடு பெற பயனாளிகள் எவருக்கும் பணம் தர வேண்டியதில்லை. அவ்வாறு பணம் கேட்டால், அதுகுறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் தெரிவித்தால், பணம் கேட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, புகார் அளித்தவருக்கு அரசு குறிப்பிட்ட தகுதிகள் இருந்தால் அவருக்கு பசுமை வீடு வழங்கப்படும்' என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக