வியாழன், 11 டிசம்பர், 2014

சாயப்பட்டறை ,ஜவுளிப் பூங்காவை எதிர்த்து 30 கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

பரங்கிப்பேட்டை:கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு கிராமத்தில் ஜவுளிப் பூங்கா அமைவதை எதிர்த்து 30 கிராம மக்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பரங்கிப்பேட்டையை அடுத்த பெரியப்பட்டு கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் சைமா என்ற நிறுவனம் ஜவுளிப் பூங்கா மற்றும் சாயப்பட்டறையை அமைக்கிறது. இதற்கான கட்டுமானப் பணியில் அந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
 இதற்கு ஜவுளிப் பூங்கா அமையவுள்ள இடத்தைச் சுற்றியுள்ள பெரியப்பட்டு, வாண்டியாம்பள்ளம், பெரியாண்டிக்குழி, சின்னாடிக்குழி, மேட்டுப்பாளையம், தச்சம்பாளையம், கோபாலபுரம், ஆண்டார்முள்ளிப்பள்ளம், நைனார்குப்பம், காயல்பட்டு, புத்திரவெளி, தாழஞ்சாவடி, சான்றோர்மேடு, சிலம்பிமங்கலம், சத்திரம் துள்ளாமேடு, புதுச்சத்திரம், வில்லியநல்லூர், சாமியார்பேட்டை, குமாரப்பேட்டை, மடவாப்பள்ளம், அன்னப்பன்பேட்டை, ரெட்டியார்பேட்டை, ஐயம்பேட்டை, பேட்டோடை ஆகிய 30 கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
 ஜவுளிப் பூங்காவினால் அப்பகுதியில் வேளாண் பணிகள் பாதிக்கப்படுவதோடு, மீன்பிடி தொழிலும் கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் சாயப்பட்டறை அமைப்பதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அதற்கான கட்டுமானப் பணிகள் செய்துதரும் சைமா நிறுவனத்தின் அனுமதியை ரத்து
 செய்ய வேண்டும். திருப்பூர், ஈரோடு பகுதிகளிலிருந்து சாயப்பட்டறைகளின் கழிவுகளை குழாய்கள் மூலமாக கடலில் கலக்க உள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி 30 கிராம மக்களும் புதன்கிழமை மாவட்ட ஆட்சியரகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 ஆர்ப்பாட்டத்துக்கு வாண்டியாம்பள்ளம் டி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
 இப்போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்புத் தலைவர் எம்.நிஜாமுதின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, மு.மருதவாணன், பாமக மாநில துணைச் செயலர் சண்முகம், மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன், நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலர் வா.கடல்தீபன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருமார்பன், மீனவர் வாழ்வுரிமை இயக்கத் தலைவர் பெரு.ஏகாம்பரம், சுற்றுச்சூழல் ஆர்வலர் அருள்செல்வம் மற்றும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
 பின்னர், கோரிக்கையை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் மனு அளித்தனர்.
photo:file

0 கருத்துகள்:

கருத்துரையிடுக