
கடித விபரம்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் ஐஎல்எஃப்எஸ் (IL & FS) என்ற தனியார் அனல்மின் நிலையம் நிறுவ மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை சார்பில் 31-5-2010ல் அனுமதி வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பசுமை தீர்ப்பாயத்தின் முன்பு மனு தாக்கல் செய்தனர். தொழிற்சாலை அமையும் பகுதியில் ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தி அதனடிப்படையில் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிட வேண்டும் என்றும், அதுவரை வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை நிறுத்தி வைப்பதாக 23-5-2012ல் பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.
அதன் பின்னர் தொழிற்சாலை நிர்வாகம் அவசரகதியில் ஒரு ஆய்வறிக்கையினை தயார் செய்து மத்திய சுற்றுச்சூழல் துறை முன்பு சமர்பித்தது. இந்த அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் துறை ஆய்வு செய்யாமலேயே மீண்டும் 14-8-2012-ல் அனுமதி வழங்கியது. இவ்வாறு மத்தியஅரசு அவசர கதியில் வழங்கப்பட்ட மறுஅனுமதியினை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மீண்டும் பசுமை தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த தீர்ப்பாயம் 14-8-2012 அன்று வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதகு. மேலும் புதியதாக ஒட்டுமொத்த சுற்றுச்சூழல் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்பிக்க வேண்டும் என்றும், அதன் மீது மத்திய அமைச்சகம் உரிய ஆய்விற்கு பின்னர் அனுமதி குறித்து முடிவு மேற்கொள்ள வேண்டுமெனவும், அதற்கான வழிகாட்டுதல்களையும் பசுமை தீர்ப்பாயம் 10-11-214 அன்று வெளியிட்ட உத்தரவில் தெரிவித்துள்ளது.
பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள 53 பக்க தீர்ப்புரையில் அனல்மின் நிலைய நிர்வாகம் எத்தைகய உண்மைகளை மூடி மறைத்து ஆய்வறிக்கை தாக்கல் செய்துள்ளது என்ற விபரத்தினையும், மத்திய,மாநில அரசு அதிகாரிகள் உண்மைகளை கண்டு கொள்ளாமல் எப்படி இருந்தார்கள் என்பது குறித்து தீர்ப்பாயம் வியப்பு தெரிவித்துள்ளது. எனவே பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்துள்ளதால், உடனடியாக அனல் மின் நிலைய கட்டுமானப்பணிகளை நிறுத்திட வேண்டும்.
பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளபடி, இத்தொழிற்சாலை அமையும் பகுதியை ஒட்டியுள்ள 25 கி.மீ சுற்றளவிற்கு ஒட்டு மொத்த சுற்றுச்சூழல் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். அதனை முழுமையான ஆய்வு செய்து அனுமதி வழங்குவது குறித்து மத்தியஅரசின் சுற்றுச்சூழல் அமைக்ககம் முடிவுகளை மேற்கொள்ள வேண்டும். உண்மை பாதிப்புகள், பிரச்சனைகள் குறித்து தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கும் அளிக்க வேண்டும்.
சுற்றுச்சூழல் ஆய்வின் போது பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள், விவசாயிகள், உள்ளாட்சி அமைப்புகள், சுற்றுச்சூழல் அமைப்புகள் ஆகியோரிடம் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளை கேட்க வேண்டும். மின்நிலையம் அமைக்கவுள்ள பகுதியில் வாழும் மக்களது வாழ்வாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர் வசதி, தரமான குடியிருப்பு, சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பொதுமக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்றிய பின்னர் தொழிற்சாலையின் கட்டுமான பணிகளை தொடர வேண்டும் என கடிதத்தில் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக