
பரங்கிப்பேட்டை மற்றும் கிள்ளை கடற்கரை கிராமங்களான சாமியார்பேட்டை,
புதுக்குப்பம், தேவனாம்பட்டினம், புதுப்பேட்டை, பரங்கிப்பேட்டை, சின்னூர், முடசல்
ஓடை உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் பரங்கிப்பேட்டை
வெள்ளாற்று முகத்துவாரம் வழியாக கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வருகின்றனர்.
அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலை கொண்டுள்ளதால் கடந்த 11ம் தேதி
இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பரங்கிப்பேட்டை மற்றும்
கிள்ளை கடல் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் 30 கிராம மீனவர்கள்
கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தங்களது விசைப்படகுகள், இன்ஜின்
படகுகளை முடசல் ஓடை கடற்கரையோரம், அன்னங்கோவில் கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி
வைத்துள்ளனர். மேலும், தொடர் மழையால் படகுகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்ஜின்
பழுதாகி விடும் என்பதால் மழை விடும்போது மீனவர்கள் படகுகளில் தேங்கியுள்ள தண்ணீரை
வெளியேற்றி வருகின்றனர். இதன் காரணமாக நேற்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளி
மாநிலங்களுக்கு மீன் ஏற்றுமதி செல்லவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும்
அன்னங்கோவில் பகுதி நேற்று வெறிச்சோடி காணப்பட்டது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக