ஞாயிறு, 2 நவம்பர், 2014

கடலூர் முதுநகரில் தூர்வாராத சாக்கடையில் தேங்கி நிற்கும் கழிவு நீர்

கடலூர் முதுநகர்:கடலூர் நகராட்சியின் 10–க்கு மேற்பட்ட வார்டுகள் கடலூர் முதுநகர் பகுதியில் உள்ளன. இந்த வார்டுகள் அனைத்திலும் ஒட்டு மொத்தமுள்ள பிரதான பிரச்சினை சாக்கடை கழிவு நீர் சரியாக ஓடாமல் அப்படியே தேங்கி நிற்பதுதான். பொதுமக்கள் தாங்கள் பயன்படுத்திய பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீட்டில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் போன்றவற்றை சாலையோரத்தில் கொட்டுகின்றனர். இதற்கு காரணம் அங்கு குப்பை தொட்டிகள் இல்லாததுதான்.
கழிவு நீர் தேக்கம்
இப்படி ரோட்டோரம் கொட்டப்பட்ட குப்பைகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக துப்புரவு செய்யாமல் கிடப்பில் போடுவதால் பலத்த காற்று மற்றும் மழை காலங்களில் இந்த ரோட்டோர கழிவுகள் கொஞ்சம், கொஞ்சமாக சாக்கடையில் விழுந்து தேங்கி நிற்கிறது. இதனால் கழிவு நீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது.
இதன் விளைவாக கழிவுநீரில் இருந்து கொடிய நோய்களை பரப்பும் கொசுக்கள் பெருமளவு உற்பத்தியாகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே ஒவ்வெர்ரு பகுதி சாக்கடையிலும் தேங்கி நிற்கும் திடகழிவுகளை அகற்றினால் கழிவு நீர் மட்டுமின்றி மழை நீர் தேங்கி நிற்காது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக கடலூர் முதுநகர் பள்ளத்தெரு, குட்டை தெரு மற்றும் கவிகாளமேக தெரு பகுதிகளில் உள்ள சாக்கடை கழிவு நீர் திட கழிவுகள் அடைத்துக்கொண்டு அப்பகுதி முழுவதும் நோய் பரப்பும் கொசுக்களை வேகமாக பரப்பி வருகிறது.
இந்த சாக்கடை கழிவு நீர் கடலூர் முதுநகர் மார்க்கெட் வழியாகவும், பிரதான சாலை வழியாகவும் கடலில் சென்றடைய வேண்டும். ஆனால் இந்த சாக்கடை கழிவு நீர் செல்லும் வழி முழுவதும் பிளாஸ்டிக் திட கழிவுகள் அடைத்து கொள்வதால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சில வேளைகளில் மார்க்கெட்டில் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
எனவே அடைமழைக்கு முன்னதாக இந்த சாக்கடையை தூர்வார கடலூர் நகராட்சி முன்வரவேண்டும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக