சனி, 1 நவம்பர், 2014

மீனவர் தூக்கு.. வாய்மூடி மவுனியான வட இந்திய ஊடகங்கள்- தமிழகம் கொந்தளிப்பு!

சென்னை: 5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு இலங்கை தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட விவகாரத்தில் வட இந்திய ஊடகங்கள் வாய்மூடி மவுனியாக இருப்பது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் போதைப் பொருள் கடத்தியதாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 5 மீனவர்களுக்கும் இலங்கை நீதிமன்றம் நேற்று தூக்கு தண்டனை விதித்தது.இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த செய்தியை 'செய்தியாக' சிறிது நேரம் மட்டுமே
வட இந்திய கார்ப்ரேட் ஊடகங்கள் ஒளிபரப்பின. இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சையத் அக்பருதீன் பேட்டி கொடுத்ததுடன் இந்த விவகாரம் முடிவுக்கு வந்துவிட்டதாக எண்ணி தங்களது வாயை மூடிக் கொண்டன வட இந்திய  கார்ப்ரேட் ஊடகங்கள்.

ஆனால் இத்தாலிய கடற்படையால் 2 கேரள மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம், பாகிஸ்தானில் சரப்ஜித்சிங் கொல்லப்பட்டது போன்ற சம்பவங்களில் அலறித் துடித்து ஓயாமல் ஒப்பாரி வைத்தன இந்த வட இந்திய கார்ப்ரேட்  ஊடகங்கள்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரி தேவ்யானி, செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட போது கண்ணீர்விட்டு கதறியழுதன இந்த வட இந்திய ஊடகங்கள். ஆனால் 5 அப்பாவி மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்ற ஒரே காரணத்துக்காக தூக்கு மேடையில் இலங்கை நிறுத்தி வைத்திருப்பது கண்டு இவர்களது நெஞ்சம் பதறவில்லை.                      
 
வாய்மூடிகள் இதுபற்றி விவாதிக்க எந்த ஒரு வட இந்திய ஊடகமும் தயாராக இல்லை.. இந்தியாவே தாங்கள்தான் என்று எண்ணிக் கொண்டு கருத்துகளை அள்ளி திணிக்கும் இந்த ஊடகங்கள் தமிழ்நாடு ஏதோ ஆப்பிரிக்காவிலோ அமெரிக்காவிலோ இருப்பதாக எண்ணம் போல..                            
 
5 அப்பாவி தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது கண்டு கொந்தளித்த ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கொந்தளிக்க அந்தப் பகுதியே போர்க்களமாகிப் போனது. இந்த நிகழ்வைப் பதிவு செய்யக் கூட வட இந்திய கார்ப்ரேட்  ஊடகங்கள் தயாராக இல்லை..

 
தமிழக ஊடகங்கள் துடிதுடித்துக் கொண்டிருக்க வட இந்திய ஊடகங்களோ கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருப்பது தமிழகத்தைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது. வேல்முருகன் கண்டனம்                       
 
இது குறித்து 150க்கும் மேற்பட்ட தமிழர் இயக்கங்களின் கூட்டமைப்பான தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தி. வேல்முருகன் நேற்று சன் நியூஸ் தொலைக்காட்சி விவாதத்தின் போது தமது கண்டனத்தைப் பதிவு செய்தும் இருந்தார்.
 
வட இந்திய  கார்ப்ரேட் ஊடகங்களின் இந்தப் போக்கு இனியும் நீடிக்குமேயானால் அவற்றுக்கு எதிரான கொந்தளிப்பு பொது உணர்வாக தமிழகத்தில் நீடித்து நிலைத்துவிடும் என்பதுதான் யதார்த்தம்.



 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக