இந்தியாவில் மின்விநியோக முறைகளை மேம்படுத்தவும், மின்துறைக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைக் குறைக்கவும் மத்திய மின்சார ஆணையம், கடந்த 2007-ம் ஆண்டில் திருத்தியமைக்கப்பட்ட மின்மேம்பாடு மற்றும் சீர்திருத்த கொள்கையை வகுத்தது. அதில் மின்வழித்தடங்கள் மற்றும் மின்விநியோக முறைகளை வலுப்படுத்துவது முக்கிய அம்சமாகும். தற்போது பயன்பாட்டில் இருந்து வரும் மின் மீட்டர்களுக்கு (கருப்பு-எலக்ட்ரோ மெக்கானிக்கல்) பதிலாக, நவீன டிஜிட்டல் மீ்ட்டர்கள் பொருத்துவதும் ஒன்றாகும். அதன்படி, அனைத்து மாநிலங்களிலும் குறிப்பிட்ட நகரங்களில் நவீன டிஜிட்டல் மீட்டரை பொருத்த மத்திய அரசு உத்தரவிட்டது.
கருப்பு மீட்டருக்கு ‘குட்பை’
2001 கணக்கெடுப்பின்படி 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட நகரங்களில் நவீன டிஜிட்டல் மீட்டர்களை பொருத்தவேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில், தமிழகத்தில் 110 நகரங்களில் மின் மீட்டர்களை மாற்றும் பணியில் மின்வாரியம் கடந்த சில ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. எனினும், அந்த 110 நகரங்கள் மட்டுமின்றி, தமிழகத்தில் 1.2 கோடி வீடுகள், நிறுவனங்கள் மற்றும் ஆலைகள் உள்ளிட்ட 2.2 கோடி மின் இணைப்புகளுக்கும் புதிய மீட்டரை பொருத்த மின்வாரியம் தற்போது முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக எரிசக்தித்துறை அதிகாரிகள் ‘தி இந்து’ நிருபரிடம் கூறியதாவது:
சிறப்பம்சங்கள் என்ன?
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் புதிய மின் மீட்டரை பொருத்தும் பணி வேகமாக நடந்து வருகிறது. இந்த ஆண்டு டிசம்பருக்குள் அதனை முடிக்க திட்டமிட்டிருந்தோம். ஆள்பற்றாக்குறை உள்ளிட்ட பல பிரச்சினைகளால் மேலும் சில மாதங்களுக்கு காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் மீட்டரில், துல்லியமாக மின்கணக்கீட்டை அறியமுடியும். இதனால் வாரியத்துக்கு வருவாய் இழப்பினைத் தடுக்கமுடியும்.
சாதாரண மீ்ட்டரில் யூனிட் அளவை மட்டுமே பார்க்கமுடியும். டிஜிட்டல் மின் மீட்டரில், உங்கள் வீட்டுக்கு எத்தனை வோல்ட் மின்சாரம் வருகிறது என்பதை அறியலாம். அதனால் குறைந்த மின் அழுத்தம், அதிக மின் அழுத்தம் போன்றவற்றை நுகர்வோரே கண்டறிந்து அதற்கேற்ப செயல்படமுடியும். ஒரு வீட்டில் மும்முனை இணைப்பு இருந்தால், அதில் ஒவ்வொன்றிலும் மின் சப்ளை அளவை நாம் பார்த்து அறியலாம். அதை வைத்து ஃபிரிட்ஜ், ஏ.சி. போன்றவற்றுக்கு எந்த ஃபேஸ் சிறப்பானது என்பதை நாமே தீர்மானிக்கலாம்.
200 யூனிட் பயனீட்டாளர்களுக்கு
தமிழகத்தில் மாதத்துக்கு 200 யூனிட் மின்சாரத்தை நுகரும் 80 லட்சம் வீடுகளில் முதலில் டிஜிட்டல் மீட்டர்களை பொருத்தத் தொடங்கினோம். இப்போது அதனை மற்ற இணைப்புகளுக்கும் பொருத்தி வருகிறோம். மின்வாரிய ஊழியர்களே வீட்டுக்கு வந்து இதைப் பொருத்தித்தருவார்கள். அதற்குக் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. இதற்கான செலவை மின்வாரியமே ஏற்கும். ஊழியர்களை உற்சாகப்படுத்த ஒரு மீ்ட்டருக்கு 10 ரூபாயை மின்வாரியம் தருகிறது. அவர்களுக்குக் கூடுதலாக பணம் தரத்தேவையில்லை.
தமிழகத்தில் மொத்தமுள்ள 2.20 கோடி இணைப்புகளில், 90 லட்சம் இணைப்புகளுக்கு டிஜிட்டல் மீட்டர் பொருத்தியாகிவிட்டது. மீதமுள்ள 1.3 கோடி இணைப்புகளுக்கும் விரைவில் புதிய மீட்டர் பொருத்தப்படும். சிங்கிள் ஃபேஸ், 3 ஃபேஸ்-க்கு தனித்தனி மீ்ட்டர்கள் பொருத்தப்படுகிறது.