வெள்ளி, 7 நவம்பர், 2014

பால் விலையேற்றத்தை தொடர்ந்து வரும் 15–ந்தேதி முதல் தமிழக மின்கட்டணம் உயர்வு


சென்னை:தமிழக அரசு சார்ந்த நிறுவனமான ‘ஆவின்’ மூலம் வினியோகிக்கப்படும் பால் விலை நவம்பர் 1–ந்தேதி முதல் லிட்டருக்கு ரூ.10 அதிகரித்து  கடந்த வாரம் தமிழக அரசு அறிவித்தது. இந்த விலை உயர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவிட்டன. பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்திவிட்டு, விற்பனை விலையை மட்டும் லிட்டருக்கு ரூ.10
உயர்த்துவதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
 இதனை தொடர்ந்து தனியார் பால் நிறுவனங்கள், இதுதான் சரியான சமயம் என  பால் விலையை ரூ 8 வரை உயர்த்தி அறிவித்துள்ளன
பொதுமக்களிடம் (கண் துடைப்பு)  கருத்து கேட்பு முடிந்த நிலையில் மின்சார கட்டண உயர்வு எந்த நேரத்திலும் வரலாம் என்று எரிசக்தி துறை அதிகாரிகள் கூறினர்
இதுகுறித்து எரிசக்தி துறை அதிகாரிகள் கூறியதாவது:–மின்சார கட்டணம் உயர்வு

மின்சார உற்பத்தி மற்றும் விநியோகிக்கும் செலவுகள் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு மின்சார கட்டணத்தை அதிகரிக்க மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்தது. அதன்படி சென்னை, ஈரோடு, நெல்லை ஆகிய இடங்களில் பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அப்போது தற்போது கட்டணம் அதிகமாக இருப்பதால் மீண்டும் கட்டணத்தை அதிகரிக்க கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனை தொடர்ந்து கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்கள் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இந்த கூட்டத்தில் வரும் 13–ந்தேதி கட்டண உயர்வை வெளியிட மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து வரும் 15–ந்தேதி முதல் மின்கட்டண உயர்வு அமல்படுத்தப்படலாம் என்று தெரிகிறது. இருந்தாலும் இதுகுறித்து தமிழக அரசு தான் முறையான இறுதி முடிவை அறிவிக்கும்.உத்தேச கட்டண பட்டியல்

இந்த கூட்டத்தில் மின்கட்டண உத்தேச பட்டியலில் குறிப்பிட்டுள்ள கட்டண விபரம் குறித்தும் ஆலோசனை நடந்தது.

குறிப்பாக வீடுகளுக்கு, முதல் 100 யூனிட் வரை ரூ.2.60 லிருந்து ரூ.3–ம், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை ரூ 2.80 லிருந்து ரூ.3.25–ம், 201 யூனிட் முதல் 500 யூனிட் வரை ரூ.4 லிருந்து ரூ.4.60–ம், 501 யூனிட்டுக்கு மேல் ரூ.5.75 லிருந்து ரூ.6.60 ஆக உயர்த்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வர்த்தக நிறுவனங்களுக்கு முதல் 100 யூனிட்டுகளுக்கு ரூ.4.30 லிருந்து ரூ.4.95–ம், 100 யூனிட்டுக்கு மேல் ரூ.7 லிருந்து ரூ 8.05–ம், உயர்மின் அழுத்த பிரிவுகளை பொருத்தவரையில் தொழிற்சாலைகளுக்கு ரூ 5.50–லிருந்து ரூ.7.22–ம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.4.50–லிருந்து ரூ.7.22–ம், தனியார் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.5.50–லிருந்து ரூ.7.22–ம், சினிமா மற்றும் வணிக நிறுவனங்களுக்கு ரூ.7–லிருந்து ரூ.8.05–ம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு, உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.அரசின் மானியம்

இந்த கட்டண விகிதத்தில் மின்கட்டணம் உயர்த்தப்படும் பட்சத்தில், வீட்டு இணைப்புக்கு 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அரசின் மானியம் கிடைக்காது. மாறாக பொதுமக்கள் முழுத்தொகையும் செலுத்த வேண்டும்.

கட்டண உயர்வுக்கு பிறகு அரசின் மானியம் எவ்வளவு என்பதும் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக