வெள்ளி, 31 அக்டோபர், 2014

கடல் நீரோட்டத்தில் மாற்றம்: மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவில்லை

கடலூர்முதுநகர்:கடல் சீற்றம் மற்றும் நீரோட்டத்தில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக நேற்று கடலூர் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை.

நீரோட்டத்தில் மாற்றம்

வடகிழக்கு பருவ மழை தொடங்கி தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வந்தது. இதற்கிடையே வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கடல் சீற்றமாக இருந்தது. இதன் காரணமாக கடலூர் மீனவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் இருந்தனர்.

கடல் சீற்றம் குறைந்ததும் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்தனர். இந்நிலையில் நேற்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக இருந்தது. மேலும் கடல் நீரோட்டத்திலும் திடீரென மாற்றம் ஏற்பட்டது. இதனால் நேற்று கடலூர் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க செல்லும் தேவனாம்பட்டினம், சிங்காரத்தோப்பு, சோனாங்குப்பம், அக்கரைக்கோரி, சொத்திக்குப்பம் உள்பட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

படகுகள் நிறுத்தம்

இதையொட்டி மீனவர்கள் தங்கள் படகுகளை துறை முகப்பகுதியில் நிறுத்தி வைத்துள்ளனர். சிறிய வகை படகுகளை தங்கள் பகுதியில் உள்ள கடற்கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைத்தனர். ஆழ்கடலில் 4, 5 நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் ஒரு சில மீனவர்கள் மட்டும் கரைக்கு திரும்பாமல் கடலில் தொடர்ந்து மீன்பிடித்து வருகின்றனர்.

பெரும்பாலான மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் துறைமுகப்பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

முடசல் ஓடை

இதுபோல் பரங்கிப்பேட்டை, கிள்ளை சுற்றுப்பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

தொடர் மழை நின்று சில நாட்கள் ஆன பிறகும் தொடர்ந்து கடல் சீற்றமாக காணப்பட்டது. இதனால் கிள்ளை, முடசல்ஓடை, பற்றடி, பில்லுமேடு, சின்னவாய்க்கால், முழுக்குத்துறை, எம்.ஜி.ஆர்.திட்டு, அன்னங்கோவில், சின்னூர், புதுப்பேட்டை, புதுக்குப்பம், வேளங்கிராயன்பேட்டை, சாமியார்பேட்டை, குமாரபேட்டை, மடவாபள்ளம், அய்யம்பேட்டை உள்பட 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் தொடர்ந்து கடலுக்கு செல்லாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் கடலோர பகுதி மீனவர்கள் நேற்று 12-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் மீனவர்களின் நாட்டு படகு, விசை படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

சில மீனவர்கள் படகில் பராமரிப்பு பணிகளையும், வலைகளை சீரமைக்கும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டனர். மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாததால் பரங்கிப்பேட்டை, புவனகிரி, சிதம்பரம் ஆகிய பகுதிகளில் மீன் வரத்து குறைந்தது. இதனால் ள புவனகிரி பகுதியில் ஆற்று மீன்கள் அதிகளவில் விற்பனையாகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக