செவ்வாய், 21 அக்டோபர், 2014

கொள்கை நிலையற்ற அரசியல் வியாபாரிகள்!

நடந்து முடிந்துள்ள மகாரஷ்ட்ரா மற்றும் அரியானா மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளதை தனிப்பட்ட மோடிக்கும்,அமித்ஷாவுக்குமான வெற்றி என்று மதவாத சக்திகள் தம்பட்டம் அடித்து வருவது நகைப்புக்குரியதே.
கொள்கை நிலையற்ற அரசியல் வியாபாரிகளின் லாப,நஷ்ட கணக்குகளை துல்லியமாக கணிக்க முடியாத வாக்காளர்கள் கடைசி நேரத்தில் யாரை ஆதரிப்பது என்ற குழப்பத்திற்கு ஆளாகி யாருக்காவது வாக்களித்து போவோம் என்ற மன விரக்தியில் எடுக்கும் முடிவுகளே பல சந்தர்ப்பத்தில் எதிர்பாரா திருப்பங்களை உண்டாக்கி விடுகின்றன.

பாஜக – சிவசேனா என்ற மதவாதத்தை வீழ்த்துவதற்காக கடந்த 10 ஆண்டு காலமாக கூட்டணி அமைத்து அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சி பீடத்தில் அமர்ந்த காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இந்த முறை பொது எதிரியை வீழ்த்தியாக வேண்டுமென்ற நிர்பந்தம் இருந்தும் கூட கடைசி நேரத்தில் கூட்டணியை முறித்துகொண்ட விசயம் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
பாஜக – சிவசேனா கூட்டணி முறிந்தாலும் அந்த கட்சிகளின் மதவாத வாக்கு வங்கிகளுக்கு எந்த வகையிலும் சேதாரம் இருக்காது என்பது பாமரனுக்கும் தெரிந்த விசயமாகும்.
போலி மதசார்பின்மை பேசிவரும் காங்கிரஸும் – சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் பாஜகவின் ஆட்சிக்கு திட்டமிட்டே வழி வகுத்து கொடுத்துள்ளதை சாமான்ய மக்கள் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள்.
தங்களது முட்டாள் தனமான செயலை மூடி மறைக்கும் விதமாக,மாற்றம் வேண்டியே மக்கள் பாஜகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்திருப்பது அவரது அரசியல் முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தியுள்ளது.
தேர்தல் முடிவு வெளி வந்த சில மணி நேரத்திலேயே பாஜகவை தேசியவாத காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரிக்கும் என்ற அக்கட்சியின் மூத்த தலைவர் பிரபுல் பட்டேலின் பேட்டி அவரது அரசியல் லாப கணக்கை வெளிப்படுத்தி விட்டது.
காங்கிரஸ் இல்லாத இந்தியா என்ற பாஜகவின் கொள்கை பிரகடனம் விரைவிலேயே அங்கீகாரம் பெற்று விடும் வாய்ப்பை நாம் மறுக்க முடியவில்லை.கொள்கையை விலை பேசும் அரசியல் வியாபாரிகளை நம்பி பாமர மக்களாகிய நாம் என்ன முடிவெடுக்க முடியும்.
source:thoothuonline.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக