ஞாயிறு, 12 அக்டோபர், 2014

புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை நாளை முதல் விநியோகம்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் 31 ஆயிரம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி நாளை(திங்கட்கிழமை) தொடங்குகிறது.


 வாக்காளர்கள் அனைவருக்கும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்படி முதல் கட்டமாக புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படும் என்றும் மற்றவர்களுக்கு படிப்படியாக வழங்கப்படும் என்றும் தெரிவித்து இருந்தது.

அதன்படி கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி நாளை(திங்கட்கிழமை) முதல் வருகிற 18–ந் தேதி(சனிக்கிழமை) வரை நடக்கிறது. இதற்கான தொடக்க விழா கடலூரில் நடைபெறுகிறது. இதில் கடலூர் மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் கலந்துகொண்டு புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகளை வழங்கி தொடங்கி வைக்கிறார். பின்னர் அந்தந்த தாலுகா மற்றும் நகராட்சி பகுதிகளில் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலம் புதிய வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது.



முதல் கட்டமாக புதிய வாக்காளர்களுக்கு, அதாவது வாக்காளர் பட்டியலில் கடைசியாக பெயர் சேர்த்தவர்களுக்கு மட்டும் வண்ண அடையாள அட்டை வழங்கப்படுகிறது. அதன்படி கடலூர் மாவட்டம் முழுவதிலும் சுமார் 31 ஆயிரம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டைகள் வருகிற 18–ந் தேதிவரை வழங்கப்படுகிறது. இதில் கடலூர் கோட்டத்தில் மட்டும் 5 ஆயிரத்து 351 புதிய வாக்காளர்களுக்கு அடையாள அட்டை விநியோகம் செய்யப்பட இருக்கிறது.

அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை விநியோகம் செய்வார்கள். பின்னர் மற்றவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை படிப்படியாக வழங்கப்படும்.


 இது தவிர வாக்காளர் பட்டியலும் விரைவில் வெளியிடப்பட உள்ளது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக வருகிற 19–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் அடுத்த மாதம்(நவம்பர்) 2–ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இதில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்ப்பதற்காக விண்ணப்பிக்கலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம், முகவரி மாற்றம் குறித்தும் விண்ணப்பிக்கலாம்.என்றார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக