புதன், 29 அக்டோபர், 2014

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் கனமழையால் 10 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் பாதிப்பு: MLA அலுவலக குழு ஆய்வு

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் கன மழையால் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்துள்ளது. இதனை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் அலுவலக குழுவினர் திங்கள்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை
ஒன்றியத்தில் நக்கரவந்தன்குடி, உத்தமசோழகமங்களம், பின்னத்தூர், கோவிலாம்பூண்டி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் மழைக்கு முன்பு விவசாயிகள் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் நேரடி நெல் விதைப்பு மூலம் சம்பா சாகுபடியில் ஈடுபட்டனர். இவர்கள் விதைத்த 10 தினத்திற்குள் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் தொடர் கனமழை பெய்தது.
நீர் விரைவில் வடிய போதிய வடிகால் வாய்க்கால்கள் மழைக்கு முன்பு தூர் வாரி பராமரிக்கப்படாததால், தொடர் கனமழையில் இருந்ததால் வயல்களில் சாகுபடி செய்த நெற்பயிர்களும், நாற்றங்கால்களும் நீரில் மூழ்கி, பயிர்கள் மடிந்து அழுகியுள்ளது. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள் கூடுதல் செலவு செய்து நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டு அழுகி கிடக்கும் நெற்பயிர்கள் மீது மீண்டும் உழவு செய்து நேரடி நெல்விதைப்பு செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கண்ட பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள நிலங்களை மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியைச் சேர்ந்த சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணனின் அலுவலக குழுவினர், பரங்கிப்பேட்டை ஒன்றியச் செயலாளர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமையில் சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பி.கற்பனைச்செல்வம், சிதம்பரம் நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன், விவசாயிகள் சங்க வட்டச் செயலாளர் ஜீவா, தலைவர் ஜின்னா ஆகியோர் திங்கள்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளர் பி.கற்பனைச்செல்வம் செவ்வாய்க்கிழமை சிதம்பரம் உதவிஆட்சியர் எம்.அரவிந்தை சந்தித்து நெற்பயிர்கள் பாதிப்பு குறித்து புகைப்படங்களுடன் மனு ஒன்றை அளித்தார். மனுவில் சிதம்பரம் மற்றும் பரங்கிப்பேட்டை பகுதிகளில் தொடர் கணமழையால் விவசாயிகள் பயிரிட்ட சம்பா நேரடி நெற்பயிர்கள் மற்றும் நாற்றங்கால் நீரில் மூழ்கி பாதித்துள்ளது. இதனால் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ10 ஆயிரத்துக்கு மேல் இழப்பீடு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழகஅரசு உடனடியாக விவசாயிகளுக்கு விதை நெல் உள்ளிட்ட உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மனுவில் பி.கற்பனைச்செல்வம் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக