புதன், 10 செப்டம்பர், 2014

கியாஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல்:நுகர்வோர் அமைப்பினர் புகார்

கடலூர் :கடலூர் மாவட்டத்தில் கியாஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கலந்தாய்வு கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினர் புகார் தெரிவித்தனர்.
மாவட்ட எரிவாயு முகவர்கள், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பினருக்கான கலந்தாய்வு கூட்டம் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறைகேட்பு கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். நேர்முக உதவியாளர் எழிலன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில், நுகர்வோர் அமைப்புகள் காஸ் சிலிண்டர்  பதிவு செய்வதற்காக எஸ்.எம்.எஸ்., மூலம் பதிவு செய்யும் முறைக்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். பதிவு செய்த வாடிக்கைதாரர்களுக்கு முறையாக காஸ் சிலிண்டர் வழங்கப்படுவதில்லை. சிலிண்டர் டெலிவரி செய்யும் நேரத்தில் வீட்டில் ஆட்கள் இல்லையென்றால் உடனடியாக ரத்து செய்து விடுகின்றனர் என நுகர்வோர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

கூட்டத்தில் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசியதாவது:-

 கியாஸ் சிலிண்டர் விலை ரூ.407. ஆனால் சில இடங்களில் ரூ.470 வரை வசூலிக்கிறார்கள். இதை தடுத்து நிறுத்த வேண்டும். கியாஸ் சிலிண்டர் வினியோகம் செய்ய வரும் நபருக்கு அடையாள அட்டையை முகவர்கள் வழங்க வேண்டும். இதனால் முறைகேடுகள் நடப்பது பற்றி உடனடியாக புகார் தெரிவிக்க முடியும்.தற்போது கியாஸ் சிலிண்டர் பதிவு செய்வதற்கு எஸ்.எம்.எஸ். முறை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் இது பற்றி கிராமப்புற மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. அவர்களுக்கு சம்பந்தப்பட்ட கியாஸ் முகவர்கள் சிறப்பு முகாம்களை நடத்தி, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கியாஸ் முன்பதிவு, வினியோகம் செய்வது தொடர்பாக செல்போனில் குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் வருகிறது. ஆனால் பெரும்பாலான மக்கள் எழுத படிக்க தெரியாதவர்களாக இருப்பதால், சம்பந்தப்பட்ட எண்ணெய் நிறுவனங்கள் குறுஞ்செய்தியை தமிழில் அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஒரு குடும்பத்தில் கணவன், மனைவி வேலைக்கு செல்பவர்களாக இருந்தால், அவர்கள் வீடு பூட்டி இருக்கும். இதை பார்த்து விட்டு, கியாஸ் வினியோகம் செய்யும் நபர், திரும்பி சென்று விடுகிறார். மேலும் அவரது கியாஸ் முன்பதிவு முறையையும் ரத்து செய்து விடுகிறார்கள். இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 ஆண்டுக்கு ஒருமுறை கியாஸ் கசிவு பற்றி பரிசோதனை செய்ய வேண்டும். ஆனால் எந்த முகவர்களும் இதை செய்வதில்லை போன்ற பல்வேறு புகார்களை தெரிவித்தனர்.

இதற்கு பதில் அளித்து முகவர்கள் பேசுகையில், கியாஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதில்லை. இது பற்றி புகார் செய்தால் சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். எஸ்.எம்.எஸ். முறையில் தான் தற்போது கியாஸ் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆகவே நுகர்வோர் எந்த செல்போன் எண்ணை தங்கள் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக வழங்கி இருக்கிறீர்களோ அந்த எண்ணில் தான் முன்பதிவு செய்ய முடியும். ஏனெனில் அந்த எண்ணை தான் ஆன்-லைனில் பதிவு செய்து இருக்கிறோம்.2 ஆண்டுக்கு ஒரு முறை கியாஸ் கசிவு பற்றி பரிசோதனை செய்கிறோம். அதற்காக தான் நுகர்வோர்களிடம் கியாஸ் அடுப்புக்கும், சிலிண்டருக்கும் இடையேயான ரப்பர் குழாய் போன்ற சிறிய பாகங்களை அவ்வப்போது மாற்ற வலியுறுத்தி வருகிறோம் என்று நுகர்வோர்களின் கேள்விகளுக்கு முகவர்கள் பதில் அளித்தனர். குடும்பத்தில் உள்ளவர்கள் இருவரும் பணி நிமித்தமாக வெளியே செல்வோராக இருந்தால் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிப்போர்களுக்கு மறுநாள் சிலிண்டர் டெலிவரி செய்யப்படும். தொடர்ந்து 2 நாட்கள் சிலிண்டரை வாங்கவில்லையென்றால் பதிவு செய்த சிலிண்டர் ரத்து செய்யப்படும். மீண்டும் பதிவு செய்த உடன் மீண்டும் டெலிவரி செய்யப்படும் என்றனர்.

கூட்டத்தில் நுகர்வோர்கள் சார்பில் நிஜாமுதீன், தமிழரசன், கணேசன், மதியழகன், தனபாலன், சுசீலா, உமா , முகவர்கள் ஆனந்த், ராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
source:dailythanthi

 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக