பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் கடலோரத்தில் செயற்கை பவளப்பாறைகள் கட்டுமானப் பணி தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.மீனவர் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, கடந்த சில ஆண்டுகளாக பிளாண்ட் என்ற தொண்டு நிறுவனம் மீன் வளத்தை பெருக்க செயற்கை மீன் உறைவிடங்களை கடலில் அமைத்து வருகிறது.
இந்த செயற்கை பவளப் பாறைகள் ஒரு மீட்டர் அகலம், உயரம் கொண்டது. இவை கடலில் சுமார் 5 கி.மீ. தொலைவில் அமைக்கப்படுகின்றன. இதில் 3-6 மாத காலத்தில் மீன்கள் முட்டையிட்டு குஞ்சு பொறித்து அதிகம் வாழ்வதால், இப்பகுதியில் அதிகளவில் மீன்கள் கிடைக்கின்றன.
மத்திய காடு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளின் நிதிஉதவியுடன் பிளாண்ட் தொண்டு நிறுவனம் இத்திட்டத்தை, கடலூர் மாவட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. இதற்காக, அதிகளவில் தூண்டில் மீன்பிடி தொழில் நடைபெறும் சி.புதுப்பேட்டை கிராமத்தை தேர்ந்தெடுத்து கடலில் செயற்கை பவளப் பாறைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.
இதனை முன்னிட்டு வியாழக்கிழமை பரங்கிப்பேட்டை அன்னங்கோயில் துறைமுகத்தில் செயற்கை பவளப் பாறைகள் கட்டுமானப் பணி தொடக்க விழா நடைபெற்றது.
விழாவுக்கு மீன்வளத் துறை துணை இயக்குநர் கே.செல்வன் தலைமை வகித்தார். முதுநிலை விஞ்ஞானி ஹெச்.முகமதுகாசிம் திட்ட செயலாக்கம் குறித்து உரையாற்றினார். பிளாண்ட் தொண்டு நிறுவன இயக்குநர் முனைவர் ஆர்.டி.ஜான்சுரேஷ் வரவேற்றார்.
விழாவில் சி.புதுப்பேட்டை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகள், கிராமத் தலைவர்கள், பரங்கிப்பேட்டை மீனவ கூட்டுறவு சங்க நிர்வாகிகள், அன்னங்கோயில் துறைமுக குழுவினர் மற்றும் மீனவர்கள் பங்கேற்றனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆண்டே ஆசீர்வாதம் நன்றி கூறினார்.









0 கருத்துகள்:
கருத்துரையிடுக