வியாழன், 14 ஆகஸ்ட், 2014

விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்

கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
 
1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32. மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.
மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது. தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்
. எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார் திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை. “30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது” என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.
மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ். பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு. 1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது
பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.
“ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்” என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், ‘பிளாசி’ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள். இதைக் குறிப்பிட்டு, “இப்போது நாம் ‘தைரியமாக’ திப்புவின் மீது படையெடுக்கலாம்” என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு. 3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன. தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு. ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.
திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல், ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.
ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார். “திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்” என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது” என்றும் கூறுகிறார். இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை. புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, “குடிமகன் திப்பு’ என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு ‘மைசூர் அரசின் சார்பாக’ உடனே நிதியனுப்பிய திப்பு, அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு “உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்” என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம். வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே. அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர். பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், “பென்சன் ராஜாக்கள்” என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது. ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன.
விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள். 1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு. 1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்” என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார் வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன். நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.


திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.

பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார். அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.
இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார். இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் ‘சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.
அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும்,விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்” என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்: “சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப் படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது.”
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன: “இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்.” இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.
மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்


இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73)“ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.

பெயர் ............................................................திப்பு சுல்தான்

லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர்................ கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ மற்றும் மைசூரின் புலி.

பிறப்பு.............................................................நவம்பர் 20, 1750

பிறப்பிடம்..............................................தேவனாகள்ள

ஆட்சிக்காலம்........................................1782 - 1799

இறப்பு........................................................மே 4, 1799

தந்தை ......................................................ஹைதர் அலி

தாய்........................................................... பாக்ர்-உன்-நிசா



திப்பு சுல்தானின் குடும்பம்!

ருக்கையாபானு, ஆற்காடு ரோஷன்பேகம், புரந்தி பேகம், கதீஜா ஜமானி பேகம் என நான்கு மனைவியர், நால்வருக்கும் குழந்தைகள் உண்டு. திப்புவின் புதல்வர்கள் ஃபத்தே ஹைதர், அப்துல் காலிக், முஹ்யித்தீன், மொய்சுதீன்கான், முஹம்மது யாசீன், முகம்மது சுபான், ஷ்ருக்கில்லாஹ், சிர்ருதீன், குலாம் முஹம்மது, குலாம் ஹமீது, முனீருத்தீன், ஜமீயுத்தீன் ஆகிய பன்னிருவர். திப்புவின் புதல்விகள் பீவி பேகம், அஸ்முலுன்னிஸா பேகம், உமருன்னிஸா பேகம், பாத்திமா பேகம், பதீயுன்னிஸா பேகம், நூருன்னிஸா பேகம், குலூமா பேகம், கதீஸா பேகம் ஆகிய எட்டுபேர்.



திப்பு சுல்தான் அரியணை ஏறியது!


1782 டிசம்பர் மாதம் 6ம் தேதி ஹைதர் அலி இறையடி சேர்ந்தார். அதன் பின்னர் 26 நாட்கள் மரணச் செய்தி யாருக்கும் அறிவிக்காமல் ரகசியமாக வைக்கப்பட்டு பொன்னானியிலிருந்து இளவரசர் திப்பு கோலார் வந்தபிறகே ஹைதர் அலியின் மரணம் அறிவிக்கப்பட்டது அதன் பின் 1782 டிசம்பர் 26 ம் தேதி (ஹிஜ்ரி 1197 முஹர்ரம் 20 ம் தேதி ) சனிக்கிழமை தனது 32 வது வயதில் நவாப் திப்பு சுல்தான் பஹதூர் என்று திப்புசுல்தான் மகுடம் சூட்டிக் கொண்டார் மகுடம் சூட்டியதும் புதிய தமது ராஜ்ஜியத்திற்கு திப்புசுல்தான் “சல்தனத்தே குதாதாத்” (இறையாட்சி) என பெயரிட்டார். புலிச்சின்னம் கொடியிலும், கீழே அல்லாஹ்வே ஆண்டவன் என்ற வாசகமும் பொறிக்கப்பட்டன.


ஆட்சி முறை!


திப்பு சுல்தான் தனது அரசு தர்பாரை ஒரு பார்லிமெண்ட் மாதிரியே நடத்தினார் படை, வியாபாரம், விவசாயம், மதம் என தனித்தனி இலாக்காக்களாக பிரித்து இருந்தார். நீதி வழங்க மொத்தம் 99 கோர்ட்டுகள் இருந்தன அனைத்து மதத்தவரும் அவரவர் மத சம்பிரதாய சட்டப்படி அவரவர்களே நீதி வழங்கினர். ஒவ்வொரு ஊருக்கும் காஜி, கதீப், காவல்நிலையம், ரகசிய உளவு இலாகா இருந்தன. எட்டு பாகமுள்ள அரசியல் சட்டப்புத்தகம் ‘கிதாபேதொஹபதுல் முஜாஹிதீனை’ (புனித வீரர்களின் வெற்றி) திப்பு இயற்றினார்


மைசூர் ராஜ்ஜியத்தில் 90 சதவீதம் ஹிந்துக்களும், 10 சதவீத முஸ்லீம்களுமே வாழ்ந்தனர். ஒரே ஆண்டு மட்டும் ஹிந்து கோயில்களுக்கும் தேவஸ்தானங்களுக்கும் 1,93,959 வராகன்களும் பிராமண மடங்களுக்கு 20,000 வராகன்களும் ஆனால் முஸ்லிம் ஸ்தாபகங்களுக்கு 20,000 வராகன்களுமே ஆக மொத்தம் 2,33,959 வராகன்கள் சர்க்கார் கஜானவிலிருந்து வழங்கப்பட்டுள்ளன. சதவிகித அடிப்படையில் மான்யம் வழங்கிய முதல் மன்னன் திப்பு சுல்தான். ஆதாரம் (கி.பி.1798 MYSORE GAZETER பக்கம் 38.VOL IV 1929)
 

 

மலபார் பகுதியில் பெண்கள் மேலாடையின்றி இருந்த பழக்கத்தை மாற்றி உயிர் உயர் மானங்காக்க மேலாடை அணியும் பழக்கத்தை உருவாக்கி குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்து கொள்ளும் பழக்கத்தைத் தடுத்தார். சட்டம் இயற்றி சீர்திருத்தம் செய்தார். திப்புசுல்தான் மைசூரில் நரபலியையும் கோவில்களின் தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டார் மதுவிலக்கை முழுமையாக அமலாக்கினார் மத ஒற்றுமையும் மதுவிலக்கும் திப்புசுல்தானின் இருகண்களாக இருந்தன



படைபலம்(ராணுவம்)



திப்பு சுல்தான் வசம் மிகப்பெரிய ராணுவம் இருந்தது. மூன்று லட்சத்து இருபதாயிரம் வீரர்கள் இதர தனிப்பட்ட ராணுவமும் போலிஸும் இருந்தன யானைகள் 900, ஒட்டகங்கள்6000, 25000 அரபிக்குதிரைகள், நான்கு லட்சம் மாடுகள், மூன்று லட்சம் துப்பாக்கிகள், இரண்டு லட்சத்து இருபத்து நாலாயிரம் வாட்கள், 929 பீரங்கிகள் மற்றும் ஏராளமான வெடிமருந்து குவியல்கள் இருந்தன




கடற்படையில் 60 பீரங்கிகள் ஏற்றக்கூடிய ஒரு கப்பல், 30 பீரங்கிகள் ஏற்றக்கூடிய 30 கப்பல்கள், இரண்டு பீரங்கிகள் ஏற்றக்கூடிய 20 படகுகள் இருந்தன அரேபியாவில் ஜித்தா வளைகுடாவில் உள்ள மஸ்கட் துறைமுகம் இந்திய மேற்கு கூரையில் உள்ள கச்சு நவகார் ஆகிய துறைமுகங்களில் கிட்டங்கிகளை திப்பு நிறுவினார். அணிவகுத்து போரிடும் 72 கப்பல்கள் அவரிடம் இருந்தன 72 பீரங்கிகளும் கொண்ட ஒரு கப்பலில் 24 ராத்தல் பீரங்கிகள் 30 ம், 18 ராத்தல் பீரங்கிகள் 30ம், 9 ராத்தல் பீரங்கிகள் 9ம் இருந்தன 40 கப்பல்களில் 10,520 கடற்படை வீரர்கள் இருந்தனர்.







திப்பு கடற்பயிற்சி பள்ளியும் கப்பல் செப்பனிடும் துறையும் நிறுவினார். இவற்றிற்கான செலவு ஓராண்டில் 1,82,400 பவுன் (சுமார் 23,84,000 ரூபாய்)ஆகியது. (தகவல்: மைசூர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் செல்வராஜ், 24 மார்ச் 1984 ல் நடந்த தென்னிந்திய வரலாற்று பேரவைக் கூட்ட சொற்பொழிவில்) ஆங்கிலேயரிடம் இல்லாத நவீன ஏவுகனைகள் அந்நாளிலேயே திப்புவிடம் மட்டுமே இருந்தன நவீன ராக்கெட்டின் முன்னோடி திப்பு சுல்தான்


போர்கள்!
திப்பு கி.பி 1767 ல் தமது 17 ம் வயதில் ஜோசப்ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியை பறித்தார் கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப்படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.1776 ல் மராட்டியர் நைஜாமியருடன் போரிட்டு காதிக்கோட்டையை திப்பு சுல்தான் வென்றார்.

1789 டிசம்பர் 28 லிருந்து 1790 மார்ச் வரை திருவிதாங்கூர் முற்றுகை. இதனால் காரன்வாலிஸ் பிரபு மைசூர் மீது போர் பிரகடனம் செய்தான் கோரப் புரட்சி ஒடுக்கப்பட்டது.

போர்க்களங்களில் திப்பு மைசூர் ராஜ்ஜியத்தை பல திசைகளில் தாக்க ஆங்கிலேயர் போர் முறையை வகுத்தனர் மேஜர் ஜெனரல் வில்லியம் மெடோஸ் ஐ பவானிக்கு அருகில் திப்பு வென்றார் கிழக்கு பகுதியில் போர் தொடுத்து கர்னல்கெல்லியும் தோற்றான் ஆங்கிலப்படையை விரட்டிக் கொண்டே திப்பு பாண்டிச்சேரி வரை விரைந்து சென்றார் 1791 பிப்ரவரியில் சதுரங்கப்பட்டினம் முற்றுகை ஆரம்பம்

1792 பிப்ரவரி 26 ம் தேதி செய்த ஒப்பந்தம் மார்ச் 19 ம் தேதி கையெழுத்தானது இதன்படி மைசூர் ராஜ்ஜியத்தின் பாதி நிஜாம், மராட்டியர் ஆங்கிலேயர் மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது. 1கோடியே 65 லட்சம் வராகனும் 10 வயதான அப்துல் காலிக் சுல்தான் 8 வயதான மொய்சுதீன் சுல்தான் இருவரையும் ஆங்கிலேயர் பிணையாகப் பெற்றனர் மீதி 1 கோடியே 35 லட்சம் வராகனும் 3 தவணையில் தர ஒப்புக்கொள்ளப்பட்டது.


இதன் மூலம் திண்டுக்கல், கோவை, சத்தியமங்கலம், தேங்கணிக்கோட்டை, சேலம், பெல்லாரி, கிருஷ்ணா நதியொட்டிய பகுதிகள் எதிரிகள் வசமாயின. 1794 பிப்ரவரி 29 ம் தேதி தேவனஹள்ளியில் மூன்றாவது தவணை செலுத்தி விட்டு தமது புதல்வர்களை திரும்பப் பெற்றார்.
1796 லிருந்து 1798 மத்தியில் வரை பிரெஞ்சு தளபதி மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் திப்பு பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்களுக்கு சமமான படைபலம் திப்புவிடம் இருந்தது.

தொழில் வளர்ச்சி!
அரிசி, சந்தனம், செம்பு, குதிரை, முத்து, செம்மணிக்கல், பட்டு இவையனைத்தும் ஏற்றுமதி செய்ய மிகவும் கவனம் செலுத்தினார் சந்தன அத்தர், எண்ணெய் வடிதொழிலைத் திப்புசுல்தான் துவங்கினார் நாடு முற்றிலும் விவசாயம் செழித்திடச் செய்தார்.
கடிகாரம், கண்ணாடி, பீங்கான் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளை வெளிநாட்டு நிபுணர்களின் உதவியுடன் நிறுவினார் மஸ்கட்டிலிருந்து பட்டுப் பூச்சிகளை வரவழைத்து பட்டு உற்பத்தியை உண்டாக்கினார் கூட்டுறவுப் பண்டக சாலைகளை அமைத்து மக்களுக்கு மலிவு விலையில் பண்டங்கள் கிடைக்க ஏற்பாடு செய்தார்

இறப்பு!
பிரிட்டிஷாரின் பிரித்தாளும் சூழ்ச்சியும், மைசூர் அரண்மனையில் முக்கிய பொறுப்பில் உள்ள நம்பிக்கை துரோக நயவஞ்சகர்களின் சூழ்ச்சியும் திப்புவை பலவீனமாக்கின. ஆஞ்சி சாமய்யா, கிருஷ்ணராவ், திருமல்ராவ், மீர்சாதிக், கமருத்தீன் போன்ற முக்கிய மந்திரிகளின் துரோகம் அம்மாவீரன் சரிவுக்கு காரணமாக அமைந்தது. தியாகதீபம் அணைந்தது




1799 மே 3ம் தேதி கோட்டை செப்பனிடும் வேலையும் அதே நேரம் நயவஞ்சக நரிகளின் துரோகத்தின் உச்சமும் நடந்தது. 1799 மே மாதம் 4ம் தேதி நடுப்பகலில் சாதாரண சிப்பாயின் உடையில் வெறும் 50 பேர்களுடன் திப்புசுல்தான் வடமேற்கு பகுதியில் சுட்டுக் கொண்டே முன்னேறினார். அவ்வேளையில் இந்த மண்ணின் புண்ணிய மைந்தனின் நெற்றி பொட்டில் குண்டு பாய்ந்தது.கத்தியை இறுகப் பற்றியபடியே அந்த வீரமைந்தன் தன் தாயக விடுதலைக்காக வீரசுவர்க்கம் புகுந்தார்.ஆம் உயிர் பிரிந்தது.

வாருங்கள் விரிவாக வரலாறை படிப்போம்
1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.


‘கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்’ - திப்புசுல்தானின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இதுவாகும். இந்தியாவில் ஆங்கிலேயர்களின் உள்ளங்களில் பீதியை விதைத்த தீரர்தான் திப்பு. அதனால்தான் திப்பு சுல்தான் தனது இன்னுயிரை தியாகம் செய்த வேளையில் அவரின் வீரமரணத்தைக் கேள்விப்பட்டு மனம் மகிழ்ந்த ஆங்கிலேய ஜெனரல் ஹாரிஸ் இவ்வாறு கூறினான்: ‘இன்று முதல் இந்தியா நம்முடையது’ என்று.

அடுத்து வந்த நூற்றி ஐம்பது ஆண்டுகள் ஆங்கிலேய ஆட்சி இந்தியாவில் நிலைபெற திப்புவின் மரணம் ஆங்கிலேயர்களுக்கு உதவியது. ஆனால் அந்த மாபெரும் வீரனின் தீரமிக்க போராட்டத்தை மறைப்பதற்காக அந்நியக் கைக்கூலிகள் இந்தியாவின் முதல் விடுதலைப் போராட்டம் 1857 ஆம் ஆண்டிலிருந்துதான் துவங்கியது என்ற வரலாற்றுப் புரட்டை எழுதி வைத்துள்ளனர்.

இந்தியாவின் முதல் பிரதமரான பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் தமது டிஸ்கவரி ஆஃப் இந்தியா என்ற நூலில் “ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும், பெரும் சவாலாகவும் இருந்தவர்கள் ஹைதர் அலியும், திப்பு சுல்தானும். அவர்கள் பிரிட்டீஷாருக்கு கடுமையான தோல்வியின் மூலம் வேதனைமிக்க அனுபவத்தை ஏற்படுத்தினார்கள். கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரத்தை உடைத்தெறியும் அளவுக்கு அவர்கள் நெருங்கினார்கள்” எனக் குறிப்பிடுகிறார்.(‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company’ - The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73).




1750 நவம்பர் 20ல் ஹைதர் அலி ஃபக்ருன்னிஸா தம்பதியருக்கு மகனாய்ப் பிறந்த திப்புசுல்தான், தனது 17ம் வயதிலேயே போர்ப்படைத் தளபதியாக நின்று வாணியம்பாடி யுத்தத்தில் ஆங்கிலேயரை வென்றார்.

1761ல் மைசூர் மன்னராக பொறுப்பேற்ற திப்பு சுல்தானின் தந்தை ஹைதர் அலி 1767-1769ல் முதலாம் மைசூர் யுத்தம், 1780ல் இரண்டாம் மைசூர் யுத்தம் உட்பட ஆங்கிலேயரை எதிர்த்து பல யுத்தம் கண்டு வெற்றி பெற்றார்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப் படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார். கி.பி.1767 முதல் கி.பி.1769 வரை தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில் ஆங்கிலப் படைக்கும் மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.


1782 டிசம்பர் 6ல் தந்தை ஹைதர் அலி மரணத்தைத் தொடர்ந்து 1782 டிசம்பர் 26ல் தமது 32ம் வயதில் திப்புசுல்தான் மைசூர் மன்னரானார். மேற்கு கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துரத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு பிரெஞ்சுப் படையினரையும் சேர்த்துக் கொண்டு ஆவேசத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு.

ஆனால் பிரஞ்சு மன்னன் பதினாறாம் லூயி பிரிட்டனுடன் சமரசம் செய்துக் கொண்டதால் திப்பு வேறுவழியில்லாமல் போரை நிறுத்த வேண்டியதாயிற்று. 1784 ஆம் ஆண்டு முடிவுற்ற இப்போரில் ஆங்கிலேய தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவால் போர்க் கைதிகளாக பிடிக்கப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த அவமானம் ஆங்கிலேயர்களுக்கு திப்புவை நினைத்து குலை நடுங்கச் செய்தது.


கி.பி.1790 ஆம் ஆண்டு முதல் 1792 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற மூன்றாவது மைசூர் போர் ஆங்கிலேயனின் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனான தர்மராஜாவால் தூண்டி விடப்பட்டது. திருவிதாங்கூர் எங்களது நட்பு நாடு அதனை போரில் ஆதரிப்பது எமது கடமை எனக்கூறி ஜெனரல் கார்ன் வாலிஸ் திப்புசுல்தானுக்கெதிராக போர் புரியத் தயாரானான்.

இச்சூழலில் திப்புவிற்கெதிராக போர் புரிய ஆற்காட்டு நவாபும், தொண்டைமான், ஹைதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள் அனைவரும் ஆங்கிலேயருடன் இணைந்து கொண்டனர். சற்றும் கலங்காத திப்பு எதிரிகளை தன்னந்தனியாக துணிச்சலுடன் எதிர்கொண்டார்.


ஸ்ரீரங்கப்பட்டினம் 30 நாட்களுக்கு மேலாக முற்றுகையிடப்பட்ட போதிலும் எதிரிகளால் திப்புவின் கோட்டைக்குள் நுழைய இயலவில்லை. இதனைக் குறித்து ஆங்கிலேய தளபதி மன்றோ கூறுகையில், ‘30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தக் கோட்டையையும், தீவையும் தூரத்திலிருந்து கொண்டு தரிசிக்கத்தான் முடிந்தது’ என்று குறிப்பிட்டான்.

போரின் துவக்கத்தில் வெற்றி பெற்ற திப்பு போரின் இறுதிக்கட்டத்தில் மராட்டியர்கள் நயவஞ்சகத்தனமாக ஆங்கிலேயர்களுடன் இணைந்து கொண்டதால் ஒப்பந்தம் செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டார். மைசூரின் பாதி நிலப்பரப்பும் எதிரிகள் வசம் சென்றது. இழப்பீடுத் தொகையாக 3.3 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இழப்பீடு தொகையை செலுத்தும்வரை திப்புவின் இருமகன்கள் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர். இழப்பீட்டுத் தொகையை செலுத்தி தனது மகன்களை மீட்ட திப்பு 1792 ஆம் ஆண்டு நடந்த போருக்கு பதிலடி கொடுக்க வலிமையான முறையில் படையையும், பொருளாதாரத்தையும் கட்டமைத்தார்.

திப்பு சுல்தானை போரில் நேரில் சந்திக்க திராணியற்ற ஆங்கிலேயர்கள் குறுக்கு வழியை கையாள ஆரம்பித்தனர். லஞ்சத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி திப்புவின் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் விலைக்கு வாங்கினர். இதனைக் குறிப்பிட்டு வெல்லெஸ்லி ஆங்கிலத் தலைமைக்கு இவ்வாறு கடிதம் எழுதினான், ‘இனி நாம் துணிச்சலாக திப்புவின் மீது போர்த்தொடுக்கலாம்’ என்று.


ஆங்கிலேயனுக்கு எதிராக நடைபெற்ற இறுதிப் போரில் தன்னந்தனியாக களமிறங்கினார் திப்பு. துரோகிகள் ஒருபக்கம், கூட இருந்தவர்களின் குழிபறித்தல் ஒருபக்கம் என எதிர்ப்புகள் ஒன்றிணைந்து தம்மை சந்தித்த பொழுதும் உதவிக்கு வருவதாக வாக்களித்திருந்த நெப்போலியனுக்கு வர இயலாத போதிலும் கலங்காமல் தமது 11 ஆயிரம் படைவீரர்களுடன் தானும் ஒரு போர் வீரனாக தீரமுடன் போரிட்டார் திப்பு.

எதிரிகள் உயிர் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர். குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கும் திப்புவிடம் “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் வேங்கை போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
எதிரிகள் உயிர்த் தியாகத்தின் வாசலை திப்புவுக்கு திறந்துக் கொடுத்தனர்.


திப்பு சுல்தான் நவீன தொழில் நுட்பத்தின் முன்னோடி
ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகளை எதிர்ப்பதற்கு தொழில் முறையில் பயிற்சி பெற்ற ராணுவமும், தொழில் நுட்பமும் தேவை என்பதை உணருகிறார் திப்பு சுல்தான். இதனால் ராணுவத்தில் ஏவுகணைத் தொழில் நுட்பத்தை புகுத்தியதில் முன்னோடியாகத் திகழ்ந்தார் அவர். இதனை டாக்டர் அப்துல்கலாம் தனது ‘அக்னி சிறகுகள்’ என்ற நூலில் தான் அமெரிக்காவின் ‘நாசா’ விண்வெளி மையத்திற்கு சென்றபொழுது திப்புசுல்தான் பயன்படுத்திய ஏவுகணையின் புகைப்படத்தை அங்கே பார்த்ததாக ஆச்சரியத்துடன் கூறுகிறார்.


இதனை இந்திய பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப்பிரிவின் (Defence Research and Development Organisation – DRDO) தலைமை இயக்குனரும் இந்தியாவின் பிராமோ ஏவுகணையின் வளர்ச்சியில் முக்கியப் பங்காற்றிய விஞ்ஞானியான திரு. சிவதாணு பிள்ளை, ‘இரு நூற்றாண்டுகளுக்கு முன்பே திப்பு சுல்தான் பயன்படுத்திய ஏவுகணைகளுக்கான தொழில் நுட்ப அடிப்படைக் கோட்பாடுகளை விவரிக்கும் ஆதாரங்களுக்கான அனைத்து ஆவணங்களையும் தயார் செய்யும் பணியில் DRDO முழு மூச்சுடன் இறங்கும்’ என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ‘ஏவுகணை வரலாற்றில் ஒரு மைல் கல்லான திப்பு சுல்தானின் படைகள் பயன்படுத்திய 2 கி.மீ தூரம் வரை சென்று இலக்கைத் துல்லியமாகத் தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கான பகுப்பாராய்வு ஆவணங்கள் தற்போது இலண்டனில் உள்ள ஆர்ட்டிலரி பொருட்காட்சி மையத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறியிருந்தார்.

வணிகத்தில் திப்புசுல்தானின் சாதனை
திப்புசுல்தான் வெறும் ஒரு போர்வீரர் மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த நிர்வாகியாகவும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு பொருளாதார வல்லுநராகவும் திகழ்ந்தார். ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கு வெறும் போர்ப்படை மட்டுமல்ல வணிகத்திலும் முன்னேற வேண்டும் என்பதை உணர்ந்து அதற்காக உயிர்துடிப்புடன் செயல்பட்டார்.


இந்தியா முழுவதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிக கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டாண்டி நோபிள் என அழைக்கப்பட்ட இன்றைய துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல்லில் மைசூர் அரசின் கப்பல்துறை என பரந்து விரிந்தது திப்புவின் வணிகத் திட்டம். வணிகத்தில் பெருமளவில் ஈடுபட்டு ஆங்கிலேயன் நடத்திய போர்களுக்கு பொருளுதவிச் செய்து வந்தனர் பனியா, மார்வாடி, பார்ஸி வணிகர்கள். ஆனால் வணிகத்தையே ஏகாதிபத்திய அந்நிய எதிர்ப்பு ஆயுதமாக மாற்ற விழைந்தார் திப்புசுல்தான்.

நல்லொழுக்கத்தை போதித்த ஒழுக்க சீலர் திப்பு சுல்தான்
அரசிற்கு வருமானத்தை ஈட்ட மது விற்பனையை அனுமதித்த தமது அமைச்சரைக் கண்டித்த திப்பு இவ்வாறு கூறினார்: “மக்களின் உடல்நலனையும், ஒழுக்கத்தையும்,பொருளாதார நலனையும் காட்டிலும் நமது கருவூலத்தை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்றார். ஆங்கிலேயர்கள் விவசாயிகளை கஞ்சா பயிரிடுமாறு வற்புறுத்தி துன்புறுத்திய வேளையில் கஞ்சா உற்பத்தியைத் தடை செய்தார் திப்புசுல்தான். ஆங்கிலேயர்கள் விபச்சாரத்திலும் காசு பார்த்த வேளையில் விபச்சாரத்தை தடை செய்ததோடு அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக தானமளிப்பதையும் தடை செய்தார்.

அடிமை விற்பனையை தடைச்செய்த திப்பு
‘எந்த அரசு வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக்கூடாது’ என ஆணை பிறப்பித்தார். கேரளாவில் மேல்ஜாதி நம்பூதிரிகளால் விதிக்கப்பட்ட கடுமையான சடங்குகளால் ஒரேநேரத்தில் பல கணவர்களைப் பெற்று ஆண்களுடனான தொடர்பில் எவ்விதக் கட்டுப்பாடுமில்லாமல் சொந்த தந்தையின் பெயர்கூட தெரியாத சமுதாயமாக நாயர் சமூகம் மாறியது. நம்பூதிரிகள் ஒழுக்க சீரழிவின் உச்சத்திற்கு சென்று சூத்திரப் பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்த வேளையில் பல நம்பூதிரி கன்னிப்பெண்கள் தனியறைக்குள் சிக்கி கன்னியராகவே இறந்தனர்.

வரதட்சணைக் கொடுமை வேறு சமூகத்தில் புழக்கத்திலிருந்தது. இத்தகைய கலாச்சார, பண்பாட்டுச் சீரழிவு, குலவழக்கம் என்ற பெயரில் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில்தான் திப்புவின் சீர்திருத்த முயற்சிகள் தொடங்கின. சன்மார்க்க விதிமுறைகளை உறுதியாகப் பேணிய திப்பு, உடம்பை நிர்வாணமாகக் காண்பிப்பதைக் கடுமையாக வெறுத்திருந்தார். குளிக்கும் வேளையில் கூட உடம்பை மேலிருந்து கீழ்வரை மறைத்திருந்த அவரது வெட்க உணர்வு, மிகப் பிரபலமாக இருந்தது.

சட்டத்திற்கு உட்படாத ஆண்-பெண் தொடர்புகளைச் சமுதாய விரோதமாக திப்பு கருதியிருந்தார்; சன்மார்க்க அடிப்படைகளை உயர்ந்ததாகக் கருதவும் தனது சொந்த வாழ்க்கையில் அவற்றை உறுதியாகக் கடைபிடிக்கவும் செய்தார். அதன் காரணத்தினாலேயே, மேலாடையின்றி மதியத் தூக்கம் தூங்கும் தனது அறையில் நுழைந்த வேலைக்காரப் பெண்ணிடம் திப்பு, கடுமையாகக் கோபப்பட்டார். இதனை பி.கே.பாலகிருஷ்ணன் என்பவர் புகழ்ந்து பாராட்டுகிறார்.

இவ்விதம் சன்மார்க்கத் தத்துவங்களில் உறுதியான நம்பிக்கையுடன் அதன் கொள்கைகளைப் பின்பற்றிய திப்பு, தனது பிரஜைகளும் அசிங்கமான பழக்க வழக்கங்களைத் துறந்து, தூயவாழ்க்கை வாழ வேண்டும் என ஆவல் கொண்டிருக்க வேண்டும். இந்த மனப்பூர்வமான நல்லெண்ணம், தான் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரி என்ற அவரது உணர்வு ஆகியன கீழ்க்காணும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு கட்டளையைப் பிறப்பிக்க அவரைத் தூண்டியது.

“உங்களுக்கு இடையில் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு கொள்வதும் உங்களின் தாய், சகோதரிகளை இவ்விதம் நடப்பதற்கு நீங்கள் சம்மதிப்பதும் உங்களது பூர்வ ஆச்சாரமாக இருந்து வருகின்ற நிலையில், நீங்கள் அனைவரும் விபச்சாரத்தில் பிறந்தவர்களும் ஆண்-பெண் உறவு விஷயத்தில் நிலத்தில் மேய்ந்து நடக்கும் கால்நடைகளை விடக் கீழான வெட்கமற்றவர்களுமாகின்றீர்கள். இவ்விதமுள்ள பாவகரமான துர் ஆச்சாரங்களை விட்டொழித்து, சாதாரண மனிதர்களைப் போன்று வாழ்வதற்கு நாம் இதன் மூலம் உங்களுக்குக் கட்டளையிடுகின்றோம்.”

மேல்ஜாதி நம்பூதிரிகளால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால், எத்தனை மகத்துவமிக்க கட்டளை இது என்பது புரியும்!

கீழ்சாதிப்பெண்கள் மேலாடை அணியக்கூடாது என்று மேல்ஜாதி வர்க்கம் விதித்த சட்டத்தை மாற்றி மேலாடை அணிய சட்டம் வகுத்தவர் திப்பு.

திப்புவின் மத நல்லிணக்கம்
திப்புசுல்தான் இஸ்லாத்தில் பிடிப்புள்ளவராக சிறந்த முஸ்லிமாக வாழ்ந்தவர். அவருக்கு இஸ்லாத்தின் மீதான பிடிப்பு பிறமதங்களின் மீது எவ்வித காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்துக் கோயில்களுக்கும், மடங்களுக்கும் திப்பு அளித்த கொடைகள் ஏராளம்.

திப்புவின் நிர்வாகத்தில் அரசால் சமய நிறுவனங்களுக்காக செலவழிக்கப்பட்ட ஆண்டு தொகையான ரூ.2,33,959 வராகன்களில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும் 2,13,959 வராகன்கள் அளிக்கப்பட்டது என்ற கணக்கு விபரமே திப்பு தனது ஆட்சியில் பெருவாரியாக இருந்த இந்துக்களுக்கு பெருமளவில் ஆதரவளித்தார் என்பது புலனாகிறது.

இதனை சேலம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியராகயிருந்த க.இலக்குமிநாராயணன் தமது ‘திப்புவின் சமயக் கொள்கை’ என்ற நூலில் குறிப்பிடுகிறார். ஆனால் இதனை ஒப்புக்கொள்ளாத காழ்ப்புணர்வு கொண்ட கல்கத்தா பல்கலைக்கழக சமஸ்கிருத பிரிவின் தலைவராகயிருந்த டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி என்பவர் ‘திப்பு முஸ்லிமாக மாறச்சொல்லி வற்புறுத்தியதால், 3000 பார்ப்பனர்கள் தற்கொலைச் செய்து் கொண்டனர்’ என்று எழுதிய அண்டப் புழுகு வங்காளம், அஸ்ஸாம், பீகார், ஒரிஸ்ஸா, உ.பி., ம.பி ஆகிய மாநிலங்களிலிலுள்ள பாடப் புத்தகங்களில் இடம் பெற்றிருந்ததை கண்ணுற்ற இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குக் கொண்டவரும் ஒரிஸ்ஸா மாநிலத்தின் ஆளுநராக பதவி வகித்திருந்த பி.என்.பாண்டே இச்சம்பவம் நிச்சயமாக பொய்யான ஒன்று கூறி இதனை எழுதிய ஹரிபிரசாத்தைத் தொடர்புக் கொண்டு அவரது கூற்று அவதூறானது என்று நிரூபித்ததோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹரிபிரசாத் எழுதிய புத்தகத்தையே நீக்குவதற்குக் காரணமான மகத்தானதொரு பணியைச் செய்தார்.

திப்புவின் விவசாயக்கொள்கை
“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன், பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.

சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக் கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்கு குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.

1792 ஆம் ஆண்டு தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை வர்த்தகம் செய்ய தமது எல்லைக்குள் அனுமதிக்கவில்லை திப்புசுல்தான். அதுமட்டுமல்லாமல், உள்ளூர் வர்த்தகர்களை ஊக்குவித்தார். பணப் பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும் பாசன வசதியைப் பெருக்கி விவசாயத்தை விரிவுப்படுத்துவதிம் கவனம் செலுத்தியிருக்கிறார்.

1911 இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையக் கட்ட பணிகளைத் துவக்கியபொழுது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798 ஆம் ஆண்டு திப்பு அடிக்கல் நாட்டப்பட்ட கல்லைக் கண்டனர். இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவேண்டும் என்ற திப்புவின் ஆணையையும் கண்டனர்.

திப்புவின் ஜனநாயக பண்பு அவருடைய நிர்வாகம் தொடர்பான உத்தரவுகள் அனைத்திலும் வெளிப்பட்டது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

போர்களத்தில் நேர்மை
“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்துப் பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.”

மக்கள் சக்தியை திரட்டியவர்
ஆங்கிலேயனுக்கு எதிரான போரில் படைவீரர்கள் மட்டுமல்ல பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என விரும்பினார். ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் மக்கள் சக்திப் போராட்டமாக வெடிக்கவேண்டும் என்று திப்பு கனவு கண்டார். இதற்காக ஒரு உத்தரவையும் பிறப்பித்தார் திப்பு. “அனைத்து விவசாயிகளுக்கும் துப்பாக்கி பயிற்சி வழங்கப்பட வேண்டும். தினமும் ஊருக்கு வெளியே துப்பாக்கி ்சுடும் பயிற்சி அளிக்கப்படவேண்டும்” என்பதே அந்த ஆணை.

தம் குடிமக்கள் மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால் ஒரு ஆட்சியாளரே அவர்களுக்கு ஆயுதம் வழங்க உத்தரவிட முடியும்?.

விடுதலைப்போரின் முன்னோடியாகவும், ஆங்கிலேயனுக்கு சிம்மசொப்பனமாகவும் திகழ்ந்து தனது இந்திய குடிமக்களின் வாழ்வில் வசந்தங்களை வீசச்செய்த மாவீரன் திப்புவின் வாழ்க்கை வரலாற்றை சஞ்சய்கான் என்பவர் தொலைக்காட்சித்தொடராக தயாரிக்க முற்பட்டபொழுது இந்தியாவின் நாசகரசக்திகளான பாசிஸ்டுகள் கொடுத்த இன்னல்கள் கொஞ்சநஞ்சமல்ல.

சஞ்சய்கான் ’the sword of tippu’ என்ற தொலைக்காட்சித் தொடரை படமாக்கிய ப்ரீமியர் சினிமா ஸ்டுடியோவுக்கு தீவைக்கப்பட்டதால் 55 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். ஏராளமான பொருள்சேதம் ஏற்பட்டது. சஞ்சய்கான் பலத்தகாயங்களுடன் பலமாத சிகிச்சைக்குப் பின்னர் உயிர் தப்பினார். இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு திப்பு சுல்தானின் உண்மையான வீரமிக்க வரலாற்றை ஒளிபரப்ப ஒரு நபர் தணிக்கை குழுவை நியமித்தது. அந்த நபர் பாசிச சிந்தனைக் கொண்ட மல்கானியாவார். அவரோ தீரன் திப்புவின் தியாகவரலாற்றை ‘கற்பனைக்கதை’ என்று குறிப்பிடவேண்டும் என்று கூறினார்.

புராணங்களும், நம்ப முடியாத சம்பவங்களெல்லாம் உண்மை நிகழ்வுகளைப்போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்பொழுது மாபெரும் வீரனின் வரலாற்றை ‘கற்பனைக் கதை’ எனக்குறிப்பிட்டதன் மூலம் இந்தியாவை நெடுங்காலம் ஆளும் காங்கிரஸ் அரசு திப்புசுல்தானுக்கு அவமரியாதையை செய்தது.

சமீபத்தில் 200 ஆண்டுகளுக்கு முன்னால் திப்புவிடமிருந்து ஆங்கிலேய ஏகாதிபத்தியவாதிகள் அபகரித்த பொருட்களில் ஒன்றான வாள் 3.5 கோடிக்கு லண்டனில் ஏலமிடப்பட்ட பொழுது அதனை வாங்கி நினைவுச்சின்னமாக பாதுகாக்கக்கூட நமது இந்திய அரசு தயாராக இல்லை.

அந்நிய கரன்சிக்கும், சொகுசு வாழ்க்கைக்கும் ஆசைப்பட்டு பிறந்த தேசத்தின் ரகசியங்களை அந்நியனுக்கு தாரைவார்க்கும் கும்பல்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கையில் பாடம் பெறவேண்டியுள்ளது. ஏகாதிபத்தியத்திற்கும், பயங்கரவாத தேசத்திற்கும் கொடை பிடித்து இந்திய தேசத்தின் இறையாண்மையை காவு கொடுக்கும் ஆட்சியாளர்களுக்கு திப்புவின் தியாகத்தில் படிப்பினைகள் உள்ளன.

அநீதிக்கெதிராகவும், அக்கிரமத்திற்கெதிராகவும், பாரபட்ச நீதிக்கெதிராகவும், அரச பயங்கரவாதத்திற்கெதிராகவும், மனித உரிமை மீறல்களுக்கெதிராகவும், வறுமை, லஞ்சம், ஊழல், நிர்வாக சீர்கேடுகள், தேசத்தை அழிக்க காத்திருக்கும் பாசிசம், உலகமயமாக்கல் போன்ற கொள்கைகளுக்கும் எதிராகவும் போராடுபவர்களுக்கு திப்புவின் தியாக வாழ்க்கை உத்வேகமாகவும், உந்துசக்தியாகவும் மாற வேண்டும் . அதுவே இந்நாளில் அந்த மாபெரும் தியாகிக்கு நாம் செய்யும் மரியாதையாகும்.

1 கருத்துகள்:

  1. Very good article and useful information. Every Indian should read and realize how for the Muslims were helped to strengthen the India and how far they have fight for the Indians freedom

    பதிலளிநீக்கு