ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம் வாபஸ்

சிதம்பரம் :அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் தொடர் போராட்டம் சனிக்கிழமை அதிகாலை முடிவுக்கு வந்தது.
எஸ்சி, எஸ்டி மாணவர்கள் செலுத்தக்கூடிய எந்தவித கல்வி கட்டணத்துக்கும் அபராதம் கிடையாது என்ற அரசாணையை நிறைவேற்ற வேண்டும், அரசிடம் இருந்து பெறப்பட்ட கல்வி உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 62 கோரிக்கைகளை வலியுறுத்தி, அண்ணாமலைப் பல்கலைக்கழக கலை, அறிவியல், வேளாண்மை, பொறியியல் புல பிரிவு மாணவ, மாணவிகள் வியாழக்கிழமை முதல் தர்னாவில் ஈடுபட்டு வந்தனர்.
பல்கலை. நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகத் தீர்வு ஏற்படாததால், மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய துறைகளைத் தவிர மற்ற அனைத்துத் துறை வகுப்புகளுக்கும் காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், போராட்டத்துக்கு தீர்வு காணும் வகையில், மாணவ, மாணவிகள் 14 பேர் அடங்கியக் குழு அமைக்கப்பட்டு, பல்கலை. நிர்வாகி ஷிவ்தாஸ்மீனா, பல்கலை. வருவாய் அலுவலர்கள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், டி.கிருஸ்துராஜ், டி.எஸ்.பி ஆர்.ராஜாராம் மற்றும் புல முதல்வர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
பேச்சுவார்த்தையில் நிறைவேற்றக்கூடிய ஒரு சில கோரிக்கைகளை 5 தினங்களுக்குள் நிறைவேற்றுவதாகவும், புதிதாக அளிக்கப்பட்ட 62 கோரிக்கைகளை, புல முதல்வர் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து நிறைவேற்றுவது குறித்து நடவடிக்கை மேற்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாணவர்கள், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு போராட்டத்தை வாபஸ் பெற்றுக்கொண்டனர்.
இதையடுத்து, அரசு சிறப்புப் பேருந்துகள் வரவழைக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் அவர்களது ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக