புதன், 20 ஆகஸ்ட், 2014

கொள்ளிடம் ஆற்றில் கதவணை :மண்டல பொறியாளர் ஆய்வு

காட்டுமன்னார்கோவில், :காவிரி பாசனம் தமிழக வரலாற்றில் மிகவும் முக்கியமானதாகும். இதை கருத்தில் கொண்டு காட்டுமன்னார்கோவில் அருகே கீழணையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 1836ம் ஆண்டு சர்ஆதர் கார்டன் என்பவரால் அணை கட்டப்பட்டது. இந்த அணை 9 அடி உயரமும், 150.13 மில்லியன் தண்ணீரும் தேக்கப்படுகிறது. கல்லணையிலிருந்து 67 மைல் கடந்து காவிரி நீர் வருகிறது. இதுவே கடைசி அணையாகும்.
இங்கு தேக்கப்படும் தண்ணீரால் ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 839 ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. மழை காலங்களில் இந்த அணையிலிருந்து உபரி நீர் அதிக அளவு வெளியேற்றப்படுகிறது. இந்த நீரை  தேக்க வேண்டும். இதற்கு ஏதுவாக கீழணைக்கு கிழக்கே மா.ஆதனூர் என்ற இடத்தில் நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கதவணைகள் அமைக்க வேண்டும்  என பல ஆண்டுகளாக விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தண்ணீரை சேமிக்க கீழணைக்கு கிழக்கே 4 கி.மீ தூரத்தில் கடலூர் மாவட்டம் ஆதனூர், நாகை மாவட்டம் குமாரமங்கலம் இடையே ரூ.400 கோடி நிதியில் பாலத்துடன் கூடிய கதவணை அமைக்கப்படும் என சட்டசபையில் தமிழக முதல்வர் தெரிவித்தார்.
இதையடுத்து நேற்று ஆதனூர் கிராமத்தில் சென்னை மண்டல பொதுப் பணித்துறை தலைமை பொறியாளர் (திட்டம் உருவாக்கம்) செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் ஆகியோர் பூர்வாங்க பணிகளை ஆய்வு மேற்கொண்டனர். இத்திட்டத்தின்படி ஒரு டிஎம்சி தண்ணீர் தேக்கப்படும் என கூறப்படுகிறது.
பாலத்துடன் கூடிய கதவணை அமைக்கப்படுவதால் போக்குவரத்து எளிதாகும். இந்த கதவணை 9 அடி உயரம் கொண்டதாக இருக்கும். கடல் மட்டத்திலிருந்து 10 மீட்டர் உயரம் உள்ளதால் எளிதில் தண்ணீர் தேக்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு ராஜன் வாய்க்கால்களில் ஷட்டருடன் கூடிய மதகு அமைக்கப்பட்டு தேக்கப்படும், தண்ணீர் திறக்கப்படும்.
இதனால் கடலூர் மாவட்டத்தில் கிள்ளை, பரங்கிப்பேட்டை ஆகிய பகுதிகளில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தொடங்கும் விவசாய பணிகளுக்கு தடையின்றி தண்ணீர் வழங்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் இரு மாவட்டங்களிலும் அதிகமாக உயரும். இந்த தண்ணீர் சுமார் 1 கிமீ வரை தேக்கப்படும். இதன் காரணமாக விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவர் என கூறப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்ட தலைமை பொறியாளர் செல்வம் கூறும்போது, தமிழக முதல்வர் அறிவித்த இந்த திட்டத்தை வடிவமைப்பு செய்து இறுதி ஆய்வு செய்ய உள்ளோம். இங்கு தண்ணீர் தேக்குவதால் ஏற்படும் பயன்கள் பற்றியும், தண்ணீர் தேக்கும் போது ஏற்படும் விளைவுகளுக்கு தீர்வு காண்பது பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.
கரைகளை பலப்படுத்துதல், போக்குவரத்திற்கு ஏதுவாக மாற்றுதல் ஆகியவற்றை செய்ய உள்ளோம். இது பற்றி ஆய்வு செய்து முன்மாதிரி வரைவு திட்டத்தை அரசுக்கு தெரிவிக்க உள்ளோம். அரசு ஒப்புதல் கிடைத்த உடன் பணிகள் தொடங்கப்படும், என்றார்.
மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் கூறும்போது, கொள்ளிடம் ஆற்றில் கட்டப்படும் இந்த பாலத்துடன் கூடிய கதவணை விவசாயிகளுக்கு பெரிதும் பயன்தர கூடியதாகும். இதற்கான பூர்வாங்க பணிகளை துறை அதிகாரிகள் தொடங்கியுள்ளனர். இந்த திட்டம் கீரப்பாளையம் கிள்ளை, பரங்கிப்பேட்டை வரை பயன் தரக் கூடியது. இதற்கான ஒத்துழைப்புகளை முழுவதும் அளிக்க உள்ளோம், என்றார்.
கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம், சிதம்பரம் செயற்பொறியாளர் ராமமூர்த்தி, தாசில்தார் பாலகிருஷ்ணன், மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக