சனி, 16 ஆகஸ்ட், 2014

ஏ.டி.எம். கார்டு வடிவில் வருகிறது புதிய ரேஷன் கார்டு: ஜனவரி முதல் வினியோகிக்க முடிவு

சென்னை :போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கவும், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஒருவர் குடும்ப அட்டையைப் பெறுவதைத் தடுக்கும் வகையிலும், ஏ.டி.எம் கார்டு வடிவில் தயாரிக்கப்படும் மின்னணு குடும்ப அட்டை ஜனவரி முதல் வினியோகிக்கப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 1 கோடியே 98 லட்சத்து 29 ஆயிரத்து 505 குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது அச்சிடப்பட்ட தாள் வடிவில் இதன் வடிவமைப்பு உள்ளது. இவை டிசம்பர் மாதத்துடன் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தற்போது நடைமுறையில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதில் உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகளாக வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின் கீழ் 10 விரல் கைரேகைகள் மற்றும் கண்கருவிழியைப் பதிவு செய்து ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தகவல் தொகுப்பைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் மின்னணு குடும்ப அட்டைகள், ‘ஸ்மார்ட் கார்டு வடிவில்’ தயாரித்து வழங்க ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறன.

ஏ.டி.எம்.கார்டு வடிவில் இருக்கும் இந்த மின்னணு குடும்ப அட்டைகள் புதுச்சேரி மாநிலத்தில் நடைமுறையில் உள்ளது. அங்கு குடும்ப அட்டையின் உரிமையாளர் நேரில் சென்று அவர்மட்டும்தான் பொருள் வாங்க முடியும்.

இந்த மின்னணு குடும்ப அட்டையை ரேஷன் கடையில் உள்ள மின்னணு இயந்திரத்தில் பதிவு செய்த பிறகு நமது கைரேகையையும் பதிவு செய்ய வேண்டும். அப்போதுதான் பொருட்கள் வாங்க முடியும். வேறு நபரிடம் கார்டை கொடுத்து அனுப்பி பொருட்கள் வாங்க முடியாது.

இந்த முறையின் மூலம் போலியான வகையில் நடைபெறும் தவறுகளைத் தடுக்க முடியும். இந்த மின்னணு குடும்ப அட்டைகள் 2015 ஜனவரி முதல் வழங்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக