வியாழன், 21 ஆகஸ்ட், 2014

பரங்கிப்பேட்டை உட்பட 30 கடலோர காவல் படை அலுவலகம் ஐ.ஜி. சைலேந்திரபாபு தகவல்

கடலூர் முதுநகர்  :கடலோர பாதுகாப்பு பணி மேற்கொள்ள, ஊர்க்காவல் படைக்கு 500 மீனவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர் என கடலோர காவல் படை ஐ.ஜி.
சி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.
கடலூர் துறைமுகத்தில் கிராம கண்காணிப்பு குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில் கடலோர காவல்படை ஐஜி சி.சைலேந்திரபாபு பங்கேற்று மீனவர்களிடையே பேசினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து தெரிவித்தது:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கடந்த 1994-
ம் ஆண்டில் கடலோர பாதுகாப்புப் படை அமைக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் 42 காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது கடல் பகுதியில் ரோந்துப் பணியை மேற்கொள்ள அதிநவீன படகுகளை தமிழக அரசு வழங்கியுள்ளது.
தமிழகத்தில் 7 லட்சம் மீனவ குடும்பங்கள் உள்ள நிலையில் அவர்கள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். கடலில் தத்தளித்த 99 மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர். 28 படகுகள் மீட்கப்பட்டன. ரோந்துப் பணியில் தற்போது ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதற்காக 500 மீனவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

கடலோர காவல் படையினருடன் இணைந்து பணியாற்றுவதற்காக ஊர்க்காவல் படையில் இருந்து தமிழகம் முழுவதும் 500 பேரை தேர்வு செய்துள்ளோம். கடலூர் மாவட்டத்தில் 35 பேரை தேர்வு செய்துள்ளோம். குறிப்பாக இதில் மீனவர்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். ஊர்க்காவல் படையில் உள்ள மீனவர்கள் 21 பேருக்கு சிறப்பு பயிற்சி அளித்து வருகிறோம்.

படகுகளை நிறுத்தும் வகையில் கிட்டி அமைக்க ரூ.50 லட்சம் வரை செலவு செய்து கொள்ளலாம். அரசும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. தமிழகம் முழுவதும் 30 புதிய கடலோர காவல் படை பிரிவு அலுவலகங்கள் கட்டப்பட உள்ளது. அதில் கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம், பரங்கிப்பேட்டை அன்னங்கோவில், விழுப்புரம் மாவட்டத்தில் புதுக்குப்பம், எக்கியார்குப்பம் ஆகிய 4 இடங்களில் கடலோர காவல் படை அலுவலகங்கள் கட்டப்பட இருக்கிறது.



 தமிழக கடலோர பகுதியில் தற்போது 100 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. அதில் 100 கடலோர பாதுகாப்பு படையினர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆகவே கடலில் எந்த இடத்தில் மீனவர்களுக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் உடனடியாக எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நாங்கள் உதவி செய்ய தயாராக இருக்கிறோம். அதேபோல் கடலில் சந்தேகப்படும் படியாக யாராவது படகில் சென்றால் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசினார்.

கூட்டத்தில் கடலோர பாதுகாப்பு படை துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, கடலூர் மாவட்ட கடலோர காவல் படை ஆய்வாளர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக