வியாழன், 3 ஜூலை, 2014

சென்னை கட்டிட விபத்து:தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!

புதுடெல்லி: சென்னையில் அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்தது தொடர்பில், தமிழக அரசு தரப்பு விளக்கத்தை இரண்டு வாரங்களுக்குள் தம்மிடம் அளிக்கக் கோரி இன்று புதன்கிழமை இந்தியாவின் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் வழங்கியுள்ளது. 
இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு தானாக முன்வந்து இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தேசிய மனித உரிமை ஆணையம் தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது. 
இந்த விபத்து குறித்து ஊடகங்களில் வெளியான தகவல்கள் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது தீவிரமான மனித உரிமை மீறல் பிரச்சனையாக கருதப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் சென்னைப் புறநகர்ப் பகுதியான மவுளிவாக்கத்தில் அமைந்துள்ள 11 தளங்களை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருகிறது. உயிருடனும் பலர் மீட்கப்பட்டு வரும் சமயத்தில், இந்த பணி இன்னும் ஒரு சில தினங்களுக்கு தொடரும் என்று தேசிய பேரிடர் மீட்புக் குழு கூறுகிறது. 
இந்த விவகாரம் குறித்து ஊடகங்களிடம் கருத்து கூறிய தமிழக முதல்வர், கட்டிட கட்டுமானப் பணியில் விதி மீறல்கள் நடைபெற்றிருக்க வாய்ப்புள்ளதாகவும், சரியான முறையில் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாமல் இருந்திருக்கக் கூடும் என்றும், அதன் காரணமாக தான் இந்த விபத்து நடைபெற்றிருக்க கூடும் என்று கூறியதாக செய்திகள் வெளியாகின. 
இதனையடுத்து தான் தேசிய மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து, தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இந்நிலையில் ஒரு சில ஊடகங்களில், இந்த விவகாரம் தொடர்பாக சரியான தகவல்களை தெரிவிக்காமல் தவறான செய்திகளை பரப்பி வருவதாக குற்றம் கூறி, தமிழக முதலவர் ஜெயலலிதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 
 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக