காஸா/ஜெருசலம்: காஸாவில் இஸ்ரேல் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை தொடருகிறது.அண்மை ஆண்டுகளில் நடைபெற்ற மிகக்கொடூரமான தாக்குதல்களில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 60க்கும் மேற்பட்ட ஃபலஸ்தீன் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்துடன் கொல்லப்பட்ட ஃபலஸ்தீன் மக்களின் எண்ணிக்கை 410ஐ தாண்டியுள்ளது.
இஸ்ரேல் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.இறந்த உடல்களையும், காயமடைந்தவர்களையும் நீக்கம் செய்ய தற்காலிகமாக போர் நிறுத்தத்திற்கு ஹமாஸும், இஸ்ரேலும் சம்மதித்திருந்தன.சர்வதேச ரெட்க்ராஸ் கமிட்டியின் மத்தியஸ்த முயற்சிகளை தொடர்ந்து போர் நிறுத்தம் ஏற்பட்டது.ஆனால், இதற்கு அற்ப ஆயுள் மட்டுமே.
ஹமாஸ் போராளிகளின் பதிலடியில் நான்கு இஸ்ரேலிய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.இத்துடன் தாக்குதல் துவங்கியதில் இருந்து கொல்லப்படும் இஸ்ரேல் ராணுவத்தினரின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. தற்காலிக போர் நிறுத்தத்தை ஹமாஸ் மீறியதாகவும், அதற்கு தாங்கள் பதிலடி கொடுத்ததாகவும் இஸ்ரேலின் ராணுவ செய்தி தொடர்பாளர் பீட்டர் லெர்னர் தெரிவித்தார்.
காஸ்ஸா நகரத்தில் இருந்து நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் மக்கள் ஞாயிற்றுக்கிழமை புலன்பெயர்ந்துள்ளனர்.அருகில் உள்ள ஷஜய்யா நகரத்தில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்துகிறது. குண்டுவீச்சில் 60க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர்.380 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸ்ஸா மருத்துவமனை செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
வீதிகளில் இறந்த உடல்கள் அதிகமாக கிடப்பதாக தப்பித்தவர்கள் தெரிவித்தனர்.ஃபலஸ்தீனில் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகளும்,பெண்களும் அடங்குவர். 2500க்கும் மேற்பட்டவர்கள் இதுவரை காயமுற்றுள்ளனர்.61 ஆயிரம் பேர் ஐக்கிய நாடுகள் துயரதுடைப்பு ஏஜன்சியின் மையங்களில் அபயம் தேடியுள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை மரணித்தவர்களில் ஹமாஸின் தலைவர்களில் ஒருவரான கலீல் அல்ஹயாவின் மகன் உஸாமா உல்ஹாவும் அடங்குவார். ஹயாவின் வீட்டின் மீது இஸ்ரேல் குண்டுமழை பொழிந்தது.
காஸ்ஸாவின் ஷஜய்யா, சிதூன், ஜபாலியா ஆகிய இடங்களில் இஸ்ரேலின் கொடூர குண்டுவீச்சில் ஏராளமானோர் மரணித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் கொடிய தாக்குதலில் மரணித்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களின் புகைப்படங்களை ஹமாஸ் வெளியிட்டுள்ளது. ஷஜய்யாவில் சாதாரண மக்களை கூட்டுப்படுகொலைச் செய்த நடவடிக்கை போர்க் குற்றம் என்று ஹமாஸின் ராணுவப்பிரிவு செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.
















0 கருத்துகள்:
கருத்துரையிடுக