வியாழன், 1 மே, 2014

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி

சென்னை:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை குண்டு வெடித்ததில் பெண் ஒருவர் பலியானர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து புறப்பட்ட கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 7.30 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தது. 9-வது நடைமேடைக்கு ரயில் வந்து சேர்ந்த சில நிமிடங்களில் ரயிலில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்தன. இதில் எஸ்-4, எஸ்-5 பெட்டிகள் சேதமடைந்தன.
குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஸ்வாதி (22) என்ற இளம் பெண் பலியானார். அவர் அமர்ந்திருந்த இருக்கைக்கு கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேரந்தவர்.
இவர் தவிர ஆந்திராவை சேர்ந்த முரளி (27), ஆஞ்சநேயலு (29),மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சர்புல் ஹக் (18), விமல்குமார் தாஸ் (23),பீகாரைச் சேர்ந்த ஹரி(21), மணிப்பூரைச் சேர்ந்த அப்துல் கான் சோதன் முர்ரே(30), சந்தன்குமார் ராய் (22),விஜயகுமார் (14), ராபின்குமார் (24), சதன் சங்கர் தாமன், சதன் வர்மன், பிளவன் குமார் (25), அனு (21) ஆகியோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் நடந்தவுடன் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அப்பகுதி காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தெற்கு ரயில்வே துணை பொதுமேலாளர் எஸ்.விஜயகுமரன் கூறுகையில், "சேதமடைந்த 3 பெட்டிகள் ரயிலில் இருந்து பிரிக்கப்பட்டு தடயவியல் சோதனை மேற்கொள்ளப்படும் மற்ற பெட்டிகளுடன் ரயில் பயணிக்கும்" என்றார்.
கவுகாத்தி எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகள் அனைவரும் ரயில் நிலைய ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தகுந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டவுடன் ரயில் தொடர்ந்து பயணிக்கும் என தெரிகிறது.
குண்டு வெடிப்பு சம்பவத்தால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், வெளிமாநிலங்கள் ரயில் போக்குவரத்தும், மின்சார ரயில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து ரயில்வே போலீஸார், மாநில காவல்துறையினர் என பல்வேறு தரப்பிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்புக்கான காரணம் தெரியவில்லை என தமிழக டி.ஜி.பி. ராமானுஜம் தெரிவித்துள்ளார். மேலும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய குண்டு வெடிப்புச் சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மேற்கொள்ளும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு உள்ளேயும், ரயில் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளிலும் வெடிகுண்டு நிபுணர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி பதிவுகளை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக