புதன், 30 ஏப்ரல், 2014

மின்சாரம் - ஜெயலலிதாவின் தோல்வியை மறைக்கும் ஊடகங்கள்!

2011ம் ஆண்டு 45 ஆயிரம் கோடிகளாக இருந்த தமிழக மின்வாரியத்தின் நட்டம் தற்போது 75 ஆயிரம் கோடிகளாக உயர்ந்துள்ளதாகவும் இதனால் சுமார் 15% அளவுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.
கருணாநிதி தலைமையிலான அரசு 2006 ஆம் ஆண்டு பதவியேற்றதிலிருந்து 2011 ஆம் ஆண்டு அந்த அரசின் பதவிக் காலம் முடியும் வரை மின் கட்டணம் உயர்த்தப் படாததும் தனியாரிடமிருந்து பெரும் தொகைக்கு மின்சாரத்தை வாங்கியதாலுமே 45 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது.

2008 ஆம் ஆண்டு வரை பெருமளவில் பாதிக்கப்படாத மின் விநியோகம், தொழில் வளர்ச்சி, மக்கள் தொகைப் பெருக்கம் போன்றவற்றால் எழுந்த தேவை அதிகரிப்பு மற்றும் மின் உற்பத்தியில் ஏற்பட்ட குறைவு போன்றவற்றால் 2008 ஆம் ஆண்டுக்குப் பின் தொடர்ந்து மின்வெட்டு அமலில் உள்ளது. சென்னை தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் 2 மணி நேரம் அறிவிக்கப்பட்ட மின் வெட்டு தொடர்ந்தது.

ஆனாலும் ஊடகங்கள் அன்றைய அரசுக்கு எதிராக மின் வெட்டுப் பிரச்சினையை ஊதிப் பெரிதாக்கி, 2011 ஆம் ஆண்டு தேர்தலில் திமுகவின் தோல்வியை உறுதி செய்தன.

அதிமுகவும் இவ்வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், மூன்றே மாதத்தில் தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்து, வாக்காளர்களின் நெஞ்சில் பால் வார்த்து, வெற்றி பெற்றது.

திமுக அரசின்போது விலையேற்றாததால் மின்வாரியம் நட்டத்தில் இருப்பதால், மின் கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகக் கூறிய முதல்வர் ஜெயலலிதா, வாக்காளர்களுக்குப் பால் வார்ப்பதற்குப் பதில் இடியை இறக்கியது போன்று மின் கட்டணத்தை உயர்த்தினார்.

கட்டணம் அதிகமாக இருந்தாலும் பரவாயில்லை; தடையில்லா மின்சாரம் வந்தால் போதுமானது என்ற நிலைக்குத் தள்ளப்பட்ட மக்கள், கட்டண உயர்வைப் பெரிதுபடுத்தவில்லை. ஏற்றுக் கொண்டனர்.

மின்வெட்டு வீராச்சாமிக்குத் தண்டனை தந்தாகிவிட்டது. இனி ஏதேனும் ஒரு புரட்சி செய்து மின்வெட்டே இல்லா மாநிலமாக ஜெயலலிதா தமிழகத்தை மாற்றுவார் என்று மக்கள் காத்திருக்க, அவரும் புரட்சி செய்தார். ஆம்! மின்வெட்டில் அவர் செய்த புரட்சியை மக்கள் எளிதில் மறக்க மாட்டார்கள். தமிழகத்தில் 18 மணி நேரம் மின்வெட்டை ஏற்படுத்தி, 2 மணி நேர மின் வெட்டையே ஊதிப் பெரிதாக்கிய ஊடகங்களின் வாயை அடைத்து புரட்சி செய்தார்.

வரலாறு காணாத அளவு மின் கட்டணம் உயர்த்தப்பட்டு, வரலாறு காணாத அளவு மின் வெட்டும் தொடர்ந்த நிலையிலும் மின் வாரியத்தின் நட்டம் 3 ஆண்டுகளில் 30 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது.

அதாவது, ஜெயலலிதா பதவியேற்பதற்கு முன் வரை மின்வாரியத்தின் நட்டமாகக் கூறப்பட்ட 45 ஆயிரம் கோடியும் கருணாநிதியின் ஆட்சியின் போது ஏற்பட்டதாகவே கணக்கிட்டாலும் அவரது ஆட்சியின்போது ஆண்டுக்கு சராசரி 9 ஆயிரம் கோடியாக இருந்த நட்டம், ஜெயலலிதா ஆட்சியின் போது சராசரி 10 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது.

கருணாநிதி ஆட்சியின் போது 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக மின்கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஆனால் ஜெயலலிதா ஆட்சியின் போது, ஆண்டுக்கு சுமார் 7,800 கோடி அளவுக்கு கட்டண உயர்வு செய்யப்பட்ட பின்னரும் சராசரியாக 10 ஆயிரம் கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. மின் கட்டண உயர்வு இல்லை எனில், ஆண்டுக்கு சராசரியாக 17,800 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளது.

நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டதே இந்த நட்டத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

கருணாநிதி ஆட்சியில் நட்டம் ஏற்பட்டால் அதற்குக் காரணம் கருணாநிதிதான் எனச் சுட்டும் ஊடகங்கள், ஜெயலலிதா ஆட்சியின் போது ஏற்பட்ட நட்டத்திற்கு ஏதேனும் காரணங்களைக் கூறுவது வாடிக்கைதான்.

கருணாநிதி ஆட்சியின் போது தொடங்கப்பட்ட மின் திட்டங்களைச் செயல்படுத்துவதில் போதிய ஆர்வம் காட்டாததே மின் தட்டுப்பாடு தொடரக் காரணம் எனப் பலரும் கூறியுள்ளனர். இது தவிர புதிய திட்டங்கள் எதுவும் தீட்டப்படவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே, தமிழகத்தில் மின் தட்டுப்பாடு அடுத்த ஐந்தாண்டுக்குள் தீர வாய்ப்பே இல்லை என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கியுள்ளார்.

அதிரடி நடவடிக்கைக்குச் சொந்தக்காரர், விரைந்து செயல்படுபவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் அவரது சார்பு ஊடகங்களால் கட்டமைக்கப்பட்ட பிம்பம் மக்களால் உடைத்து நொறுக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

-அழகப்பன்-
நன்றி:இந்நேரம்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக