பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை, பக்கிங்காம்
கால்வாய் பராமரிப்பின்றி ஆக்கிரமிப்பில் சிக்கி சுவடு தெரியாத அளவிற்குக் காணாமல்
போய் உள்ளது. இதனால் மழை, வெள்ளக் காலங்களில் தண்ணீர் வடிய வழியில்லாமல் போய்விடும்
என விவசாயிகள் கவலையில் உள்ளனர்மக்களின் பசிப்பிணியைப் போக்க வெட்டப்பட்ட
பக்கிங்காம் கால்வாய் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தரைவழி போக்குவரத்து சீர்படாத
நிலையில் நீர் வழி போக்குவரத்து முதன்மையானதாக கருதப்பட்ட காலத்தில் இந்த கால்வாய்
மூலம் வாணிபம் நடந்துள்ளது. வாணிப நோக்கில் அடியெடுத்து வைத்த ஆங்கிலேயர்கள்,
பிரெஞ்சுக்காரர்கள் இந்த கால்வாய் வழியே பரங்கிப்பேட்டையில் இருந்து சென்னை வரை
வாணிபம் மேற்கொண்டுள்ளனர்.
இத்தகைய வரலாற்று சிறப்பு வாய்ந்த பக்கிங்காம்
கால்வாய் காலப்போக்கில் ஆக்கிரமிக்கப்பட்டு விவசாய நிலமாகவும், தனிநபர்கள் தங்களின்
தேவைக்காக கால்வாய்க்கு குறுக்கே சாலை அமைத்தும் வருகின்றனர். இதனால் மழை
காலங்களில் ஏற்படும் வெள்ளத்தின் போது தண்ணீர் வடிய வழியில்லாமல்
போய்விடுகிறது.பக்கிங்காம் கால்வாய்யை ஒட்டியுள்ள கிராமங்களான கரிக்குப்பம்,
தோப்பிருப்பு, கே.பஞ்சங்குப்பம் உள்ளிட்ட கிராமத்தினர்கள் கோடை காலங்களில் தங்களின்
கால்நடைகளுக்குக் குடிநீருக்காகவும், விவசாய பாசன வசதிக்காகவும் இந்த கால்வாயை
அதிகளவில் பயன்படுத்தி வந்தனர்.தற்போது தனிநபர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து
வருவதால் விவசாயத்திற்குப் பாசன வசதி இல்லாமலும் போய்விடும் என விவசாயிகள்
கவலைப்படுகின்றனர்.
கடந்த காலங்களில் பொதுப்பணித்துறை சார்பில்
பக்கிங்காம் கால்வாய் தூர்வாரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. இதனால் தனிநபர்களால்
ஆக்கிரமிப்பு செய்யப்படாமல் இருந்து வந்தது. தற்போது அதிகாரிகள் கண்டுக்கொள்ளாததால்
ஆக்கிரமிப்பு செய்வது அதிகரித்து வருகிறது.
எனவே பக்கிங்காம் கால்வாய் இரண்டு பக்கமும் ஆக்கிரமிப்புகளை அகற்றி கரையை
மேம்படுத்த வேண்டும் என விவசாயிகள் அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.








0 கருத்துகள்:
கருத்துரையிடுக