ஞாயிறு, 24 நவம்பர், 2013

மத்திய பிரதேச பாரதிய ஜனதா கட்சியின் பித்தலாட்டம்!

போபால்:மத்திய பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் வரப்போகும் நிலையில், அந்த மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி செய்துள்ள விளம்பரங்கள் பித்தலாட்டமானவை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.




விளம்பரத்தில் உள்ள வாசகங்கள்:
"நான் முதலமைச்சராவதற்கு முன்பு சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. போர்க் காலத்தில் குண்டு போட்ட சாலை போல் குண்டும் குழியுமாக இருந்தன. நான் மாநிலம் முழுவதும் பயணம் செய்தபோது இந்த அவலத்தைப் பார்த்தேன்.

என்னுடைய வாகனம் செல்வது கூட பெரும் சிரமமாக இருந்தது. இவற்றையெல்லாம் சரி செய்வதென்பது எனக்கு மிகவும் பெரிய சோதனையான ஒன்றாக இருந்தது.

இந்த பாழடைந்த சாலைகளை சீர் செய்ய மிகப்பெரிய யாகம் செய்வதைப் போன்று கடினமான காரியமாக இருந்தது. இப்போது நான் செய்த காரியத்தின் பலனை நீங்களே பாருங்கள்.

இந்த சாலையைப் பார்த்த பிறகு இந்தியாவே கூறும் பாதுகாப்பான மற்றும் நவீன வசதியுடைய சாலைகள் மத்திய பிரதேச சாலைகள் என்று.!"

இவ்வாறு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது மத்திய பிரதேச பா.ஜ.க. அரசால்.!

உண்மை என்னவென்றால்..,


உண்மை என்னவென்றால் இது மேற்கு வங்காளத்தில் உள்ள துர்காபூர் சாலையாகும். உண்மையாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சாலை போட்டிருந்தால் அந்த சாலையை‌ப் படமெடுத்து விளம்பரம் செய்ய வேண்டியதுதானே?

சாலை சீரமைப்பு பணி கடினமான வேலைதான்; ஆனால் மிகப்பெரிய யாகம் நடத்துவது போல சிரமமான காரியம் என்கிறார் ம.பி. முதல்வர். யாகம் நடத்துவதில் என்ன அய்யா சிரமமிருக்கிறது?

அரிசி, பருப்பு, தங்கக்காசு, பட்டுப்புடவை, நெய் போன்ற விலை உயர்ந்த பொருட்களை நெருப்பில் போட்டு எரிப்பது தானே யாகம்! அதுவும் யாகம் செய்யும் யாரு‌ம் தன் சொந்த காசில் பொருட்களை வாங்கி நெருப்பில் போடுவதில்லையே..!

கேட்டால் மந்திரம் சொல்கிறார்கள் என்பார்கள். யா‌ர் நமக்கு புரிகிற மொழியில் மந்திரம் சொல்கிறா‌ர்க‌ள். எதையோ ஒன்றை நமக்கு புரியாத மொழியில் உளருகிறா‌ர்க‌ள். நம் மக்களும் அதற்கு மண்டையை மண்டையை ஆட்டி விட்டு கேட்ட காசை கொடுத்து விடுகிறா‌ர்க‌ள்.

ஒரு வேளை சிவராஜ் சிங் சவுகான் நான் சாலை போட்டது கடினமான வேலை என்று கூறியதன் பொருள் யாகம் செய்வதைப்போல் தானோ?



 
இதேபோல் ஸ்பெயினில் உள்ள சாலை படத்தைப் போட்டு மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.-வின் சாதனை என்று விளம்பரம்!
50 ஆண்டுகளாக இருந்த காங்கிரஸ் சாலைப் பணியை மேம்படுத்தவில்லை, ஆனால் 10 ஆண்டுகளுக்குள் அப்படி இருந்த சாலையை இப்படி மாற்றிவிட்டோம் என்று பா.ஜ.க.-வினர் விளம்பரம் தந்து இருந்தார்கள்; படத்தை உற்றுநோக்கும் பொழுது அது ஸ்பெனியில் உள்ள ஒரு கார்கோ நிறுவன விளம்பரத்தில் உள்ள படம்.

இந்த நிறுவனம் 2009 ஆண்டு இந்த இணைய தளத்தை துவங்கி அதில் விளம்பரத்திற்காக (www.icargoshipping.com) ஸ்பெயின் சாலையில் கார்கோ நிறுவன வண்டிகள் ஓடுவது போன்று உள்ள இந்த படத்தை அப்படியே எடுத்து எடிட் கூட செய்யாமல் ஒட்டி வைத்து சிவராஜ் சிங் சவுகானோடு போட்டிருக்கிறார்கள்.

ஒரு மாநில அரசை ஆளும் கட்சி தன்னுடைய விளம்பரத்தில் இப்படி ஒரு பொய்யான விளம்பரத்தை பத்திரிக்கை வாயிலாக கொடுத்து அதிகாரபூர்வமாக மக்களை ஏமாற்றியுள்ளனர்.

இந்த யோக்கியர்கள்தான், நாட்டை ஆளத் துடிக்கிறார்கள்; நாளும் ஒரு வரலாற்று புரட்டுகளைக் கூறி...!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக