பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை வெள்ளாற்றில் சேதமடைந்துள்ள பழைய ரயில்வே பாலம்,
புதிய ரயில்வே பாலத்தின் மீது சாய்ந்துவிழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால்
வெள்ளாற்றில் மீன் பிடிக்கும் மீனவர்கள் அச்சமடைந்து
வருகின்றனர்.பரங்கிப்பேட்டை வெள்ளாற்றின் குறுக்கே ஆங்கிலேயேர் ஆட்சி காலத்தில் மீட்டர்கேஜ் ரயில்வே இரும்பு பாலம் கட்டப்பட்டு அதன் வழியாக ரயில்வே சேவை இயக்கப்பட்டது. 2010 ஆண்டு விழுப்புரம் - மயிலாடுதுறை மீட்டர் கேஜ் ரயில்வே பாதையை அகல ரயில்வே பாதையாக மாற்றுவதற்காக பழைய பாலத்தின் அருகிலேயே புதிய ரயில்வே பாலம் கட்டப்பட்டது. அந்தப் பாலம் வழியாக விழுப்புரம் - மயிலாடுதுறை பாசஞ்சர் ரயில், எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
புதிய பாலத்தின் அருகில் உள்ள மீட்டர் கேஜ் இரும்பு பாலத்தை அகற்ற டெண்டர் விடப்பட்டு அகற்றும் பணி நடந்து வந்தது. குறிப்பிட்ட கால கெடுவுக்குள் அகற்றப்படாததால் அந்தப் பணி பாதியிலேயே நின்றுவிட்டது. இதனால் பழைய இரும்பு பாலம் தொங்கிய நிலையில் புதிய பாலத்தில் சாய்ந்து விழும் நிலை உள்ளது. தானே புயலின்போது இரும்பு பாலம் இன்னும் கொஞ்சம் சாய்ந்து அப்படியே தொங்கிய நிலையில் உள்ளது.
பரங்கிப்பேட்டை வெள்ளாற்று அருகில் நஞ்சைமகத்துவாழ்க்கை, பனங்காடு, காரைக்காட்டுசாவடி, மடுவங்கரையைச் சேர்ந்த மக்கள் வெளியூர் செல்லவும், மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல பரங்கிப்பேட்டைக்கு இந்த பாலத்தின் வழியாகதான் வந்து செல்ல வேண்டும். பழைய இரும்பு பாலம் சாய்ந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.
மேலும் அகரம் புதுப்பேட்டை, ஆத்தங்கரை தெரு, இருளர் காலனி பகுதி மீனவர்கள் பரங்கிப்பேட்டையில் இருந்து படகில் இந்தப் பாலம் வழியாக புவனகிரி வரை சென்று மீன் பிடித்து வருகின்றனர். பழைய இரும்பு பாலம் தண்ணீரிலேயே உட்கார்ந்துள்ளதால் குறுகலான வழியில் படகுகளில் சென்று வர சிரமமாக உள்ளது.
பாலம் அருகில் மீன்பிடிக்கும் மீனவர்களும் இரும்பு பாலத்தின் நிலையைக் கண்டு அச்சத்துடன் மீன் பிடித்து வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக பழைய இரும்பு பாலம் சாய்ந்த நிலையில் உள்ளதால் பாதிப்பு ஏற்படுவதற்கு முன்பு ரயில்வே துறை அதிகாரிகள் பழைய இரும்பு பாலத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.











0 கருத்துகள்:
கருத்துரையிடுக