திங்கள், 7 அக்டோபர், 2013

பிச்சாவரத்தில் கூட்டம் அதிகரிப்பு:காட்டேஜ் வசதி இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

சிதம்பரம் :பிச்சாவரம் வனச்சுற்றுலா மையத்தில் சதுப்பு நில காடுகளின் மையத்தில் காட்டேஜ் இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
சிதம்பரம் அடுத்த பிச்சாவரத்தில் உலக புகழ்பெற்ற வனச்சுற்றுலா மையம் உள்ளது. இங்குச் சதுப்பு நிலக்காடுகளுடன் இயற்கை சூழலுடன் மருத்துவ குணம் கொண்ட சுரபுன்னை என்னும் மாங்குரோவ்ஸ் தாவரங்கள் நிறைந்திருப்பதால் உலக அளவில் இந்த சுற்றுலா மையம் சிறப்பு வாய்ந்தது. சுற்றுலா மையத்திற்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
தற்போது கோடை காலம் போல் வெயில் வாட்டியெடுப்பதால் உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் பிச்சாவரம் வன மையத்திற்கு காலை முதலே வந்து குவிந்துவிடுகின்றனர்.
விடுமுறை நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் கூட்டம் அதிகரித்து வருவதால் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உடனடியாக படகில் அழைத்து செல்லப்படுகின்றனர்.
சுற்றுலா மையத்தில் உள்ள கண்காணிப்புக் கோபுரத்தில் சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவர்கள் ஏறி மாங்குரோவ்ஸ் தாவரங்களை இங்கிருந்தே கண்டு ரசிக்கின்றனர். சிறுவர்கள் விளையாட பூங்கா உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால் பள்ளி மாணவர்கள், குழந்தைகள் சிறுவர் பூங்காவில் விளையாடி மகிழ்ச்சியடைந்து செல்கின்றனர்.
பிச்சாவரம் என்றால் சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்தமானது சதுப்பு நிலக்காடுகளுக்கு மத்தியில் அனைத்து வசதிகளுடன் காட்டேஜில் தங்குவது தான். அது, தற்போது இல்லாதது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
சதுப்பு நில காடுகளின் மையத்தில் வனதுறைக்குச் சொந்தமான இடத்தில் சுற்றுலாத் துறை காட்டேஜ் கட்டி பயணிகள் தங்குவதற்கான வசதிகள் செய்து தந்துள்ளது.
தற்போது அந்த காட்டேஜ்கள் பூட்டிகிடப்பதால் சதுப்பு நிலக்காடுகளின் மையத்தில் தங்கி ஓய்வு எடுக்கலாம் என்று ஆர்வத்துடன் வரும் சுற்றுலா பயணிகளுக்கு பெரும் ஏமாற்றம் அளிக்கிறது.
காட்டேஜ் உள்ள இடங்களில் மீன் அருங்காட்சியகம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தால் சுற்றுலா பயணிகள் இங்கு அதிக நேரம் செலவிட முடியும்.
எனவே பழையபடி காட்டேஜ்களை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக