செவ்வாய், 1 அக்டோபர், 2013

பரங்கிப்பேட்டை ஒன்றியத்தில் நெற்பயிர்கள் காய்ந்து வருவதால் விவசாயிகள் கவலை : குடத்தின் மூலம் தண்ணீர் தெளிக்கும் அவலம்

பரங்கிப்பேட்டை:பரங்கிப்பேட்டை ஒன்றிய பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீர் இன்றி காய்ந்து வருவதால் பயிர்களைக் காப்பாற்ற விவசாயிகள் குடத்தின் மூலம் தண்ணீரை எடுத்து சென்று நெற்பயிர்கள் மீது தெளித்து வருகின்றனர்.தமிழகத்தில் போதிய மழை இல்லாதது, கர்நாடகா மாநிலத்தில் இருந்து தண்ணீர் திறந்து விடாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர்.
இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் பெய்த கன மழையால் மேட்டூருக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதனால் மகிழ்ந்த விவசாயிகள் இந்தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் பிரச்னை இருக்காது என நம்பினர். கடந்த 20 நாட்களுக்கு முன் பரவலாக மழை பெய்ததால் விவசாயம் செய்ய தண்ணீர் பஞ்சம் இருக்காது என நினைத்து அனைத்து இடங்களிலும் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட கொத்தட்டை, கரிக்குப்பம், பெரியகுமட்டி, சின்னகுமட்டி, வில்லியநல்லூர், புதுச்சத்திரம், தச்சகாடு, சேந்திரக்கிள்ளை உட்பட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நஞ்சை, புஞ்சை நிலங்களில் விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர். தற்போது நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து வரும் நிலையில் வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்துள்ளதால் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறந்துவிடப்படவில்லை. இதன் காரணமாக நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்ட நெற்பயிர்கள் காய்ந்து வருகிறது.இதனால் விவசாயிகள் கடந்த ஆண்டுகளில் ஏற்பட்டது போல் இந்தாண்டும் பாதிப்பு ஏற்பட்டு விடுமோ என கவலையடைந்து வருகின்றனர். ஒரு சில விவசாயிகள் நெற்பயிர்களை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என மன தைரியத்தில், தங்களுடைய நிலங்களில் சிறிய அளவிலான குட்டையை வெட்டி அதில் கிடைக்கும் தண்ணீரை கொண்டு குடங்களின் மூலம் எடுத்துச் சென்று நெற்பயிர்களில் தெளித்து வருகின்றனர். வசதிபடைத்தவர்கள் இன்ஜின் மூலம் நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.தற்போது உள்ள சூழ்நிலையில் இயற்கை கைகொடுத்து மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர் களை காப்பாற்ற முடியும் என்பது மட்டுமே உண்மை.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக