திங்கள், 14 அக்டோபர், 2013

2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி துவங்கியது : வனத்துறை நடவடிக்கைக்கு வரவேற்பு

கடலூர் : கடலூர் மாவட்டத்தில் வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.கடந்த 2011ம் ஆண்டு, டிசம்பர் 30ம் தேதி, வீசிய "தானே' புயலில் கடலூர் மாவட்டம் உருக்குலைந்தது. சாலையோரம் நிழல் தந்த பசுமையான மரங்கள், மகசூல் தரும் மா, பலா, முந்திரி, தென்னை என 2 கோடிக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் பசுமை இழந்து காணப்பட்ட கடலூர் மாவட்டத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வெயிலின் தாக்கம் அதிகமிருந்தது.
மாவட்டத்தில் மீண்டும் பசுமையை ஏற்படுத்தும் நோக்கில், சாலையோரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் உற்பத்தி செய்து நடுவதற்கு வனத்துறை முடிவு செய்தது.
இதற்காக, கடலூர் புயல் தடுப்புச் சரகம், பிச்சாவரம், சிதம்பரம், நெய்வேலி, சிதம்பரம் ஆகிய ஆறு வனச்சரகங்களில் நாற்றங்கால் மூலம் 2 லட்சம் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யும் பணி கடந்த ஜனவரி மாதம் துவங்கியது. பாதாம், இலுப்பை, புங்கன், வேம்பு, வேங்கை, செம்மரம், ரோஸ்வுட், துமிழ், நீர்மத்தி, மலைவேம்பு உள்ளிட்ட 15 வகை மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டன.
கன்றுகள் வளர்ந்துள்ள நிலையில், நகரம், கிராமங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளிகள், சாலையோரம், பொது இடங்களில் கன்றுகள் நடும் பணியை வனத்துறை தீவிரமாக செய்து வருகிறது. அதன்படி கடலூர், புதுப்பாளையம் சீத்தாராம் நகரில் நேற்று, மரக்கன்றுகள் நடப்பட்டன. அதனை பாதுகாக்க சுற்றிலும் கம்புகளை நட்டு, சாக்கினால் மூடப்படுகிறது.
வனத்துறையின் இந்த நடவடிக்கையை பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "தானே' புயலில் இழந்த பசுமையை மீண்டும் ஏற்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்து, நடப்பட்டு வருகின்றன. இப்பணிகள் கடந்த ஜூலை மாதம் துவங்கியது. மாவட்டத்தில் அந்தந்தப் பகுதியில் உள்ள வனத்துறையினர், மரக்கன்று நட்டு வைக்கின்றனர்.
வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும்.
மரக்கன்றுகளை தண்ணீர் ஊற்றி பாதுகாக்க பொது மக்கள் முன்வர வேண்டும்' என்றார்.


 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக