செவ்வாய், 22 அக்டோபர், 2013

சாலை அமைக்கக் கோரி 19 மீனவ கிராமத்தினர் மனு

   
கடலூர் :19 மீனவ கிராம மக்களின் 15 ஆண்டுகால கோரிக்கையான 2 கிலோ மீட்டர் சாலைப் பணியை நிறைவேற்ற வேண்டும் என மீனவப் பஞ்சாயத்து பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். 
 கடலூர் அருகே மீனவ கிராமமான சித்திரைப்பேட்டையிலிருந்து பரங்கிப்பேட்டை வரை கடலோரப் பாதை உள்ளது.
தற்போது இந்த பாதை தைக்கால்தோணித் துறையில் இருந்து தொடங்கி சொத்திக்குப்பம், ராஜாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, தம்மணாம்பேட்டை, நாயக்கர்பேட்டை, நஞ்சலிங்கம்பேட்டை, பெரியக்குப்பம், பேட்டைநகர், அய்யம்பேட்டை, மானியார்பேட்டை, அன்னப்பன்பேட்டை,ரெட்டியார்பேட்டை, மடவாய்பள்ளம், குமாரப்பேட்டை, சாமியார்பேட்டை, புதுக்குப்பம், இந்திராநகர், புதுப்பேட்டை, சின்னூர் வடக்கு மற்றும் தெற்கு சலங்கைகாரத் தெரு ஆரியநாட்டு சலங்குகாரத் தெரு வழியாக பரங்கிப்பேட்டை வரை செல்கிறது.
 தற்போது இந்தப் பாதையில் சித்திரப்பேட்டையில் இருந்து தம்மணாம்பேட்டை வரையில் உள்ள 2 கிலோ மீட்டர் தூரம் சாலை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் தம்மணாம்பேட்டையில் இருந்து சித்திரைப்பேட்டை வரையிலான 19 மீனவ கிராம மக்கள் சுமார் 10 கிலோமீட்டர் வரை சுற்றி வரும் அவல நிலை உள்ளது.
குறிப்பிட்ட அந்த 2 கிலோமீட்டருக்கு சாலை அமைப்பது தொடர்பாக 19 மீனவ கிராமப் பஞ்சாயத்து நிர்வாகிகள் கடலூர் மாவட்ட வருவாய்
அலுவலர் ப.மனோகரனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
 குறிப்பிட்ட தூரத்துக்கு சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் 15 முதல் 20 கி.மீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது.
 தனியார் நிறுவனம் மற்றும் தனிநபருக்குச் சொந்தமான இடத்தில் மட்டுமே சாலை அமைக்கப்படாமல் உள்ளது.
சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்களிடம் பேசி, சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக